வைரஸ் நோய்களை விரட்டும் விசித்திர வழிபாடு: விடிய விடிய பிரகலாதன் சரித்திர இரணிய நாடகம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகத்தூர் கிராமத்தில், பல தசாப்த கால பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் “இரணிய நாடகம்” தை மாதம் 2-ஆம் தேதி இரவு மிக விமரிசையாக நடைபெற்றது. அறிவியல் முன்னேற்றமடைந்த காலத்திலும், ஆன்மீக நம்பிக்கையையும் கலை ஆர்வத்தையும் ஒருசேரக் கொண்டுள்ள இப்பகுதி மக்கள், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய இந்த நாடகத்தைக் கண்டு ரசித்தனர். தீய சக்திகளை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய நரசிம்ம அவதாரத்தின் சிறப்புகளை விளக்கும் இந்த நாடகம், பகத்தூர் கிராமத்தின் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது.

இந்த நாடகம் நடத்தப்படுவதற்குப் பின்னால் ஒரு தீர்க்கமான வரலாற்றுப் பின்னணி உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமத்தில் பரவிய கொடிய வைரஸ் தொற்றால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். அந்த பேரிடர் காலத்தில், மகாவிஷ்ணுவின் லீலைகளை விளக்கும் பிரகலாதன் சரித்திரத்தை நாடகமாக நடத்தினால் ஊரைத் தாக்கிய நோய்த் தொற்று நீங்கும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தொடங்கப்பட்ட இந்த வழக்கம், இன்று வரை தடையின்றித் தொடர்கிறது. ராமாயண, மகாபாரத காலம்தொட்டே ஆடல், பாடல் வழியாகக் கதைகளைச் சொல்லும் மரபு இருந்தாலும், இக்கிராமத்தில் இது ஒரு “நோய் தீர்க்கும் வழிபாடாகவே” பார்க்கப்படுகிறது.

இந்த நாடகக் குழுவில் மொத்தம் 30 கலைஞர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளியூர்களிலும், சில வெளிநாடுகளிலும் பணிபுரிந்து வந்தாலும், தை மாதத்தில் நடைபெறும் இந்த நாடகத்திற்காகத் தங்களது பணிகளை ஒத்திவைத்துவிட்டுச் சொந்த ஊருக்குத் திரும்புவது வியக்கத்தக்க விஷயமாகும். நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்குத் தொடங்கிய நாடகம், மறுநாள் காலை 8.30 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் தத்ரூபமாக நடைபெற்றது. நாடக சபா தலைவர் நடராஜன் மற்றும் தண்டபாணி முன்னிலையில், இரணியனாக ஞானசங்கர், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும், நரசிம்மராகத் தியானசங்கரும் ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்தினர்.

சிறுமி பிரகலாதனாக பாஸ்கர், கவி பிரகாஷ், அஸ்வின் ஆகியோர் நடித்தனர். சுக்ராச்சாரியாராக விஜயகுமார், எமதர்மராக ரமேஷ், நீலாவதியாக கனகராஜ் ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தனர். இடையில் சிரிப்பு மழையைப் பொழிந்த கோமாளி சஞ்சய் மற்றும் தூதர்கள், துக்காச்சாரியார் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. சிறுமுகை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் களத்தில் அமர்ந்து நாடகத்தை ரசித்தனர். கிராமியக் கலைகள் நலிவடைந்து வரும் சூழலில், பகத்தூர் கிராம மக்கள் தங்களது கலாச்சாரத்தையும் ஆரோக்கிய நம்பிக்கையையும் இப்படிக் கலை வழியாகப் பாதுகாத்து வருவது பாராட்டுக்குரியது.

Exit mobile version