பசுமைப் பரப்பை அதிகரிக்கத் தேனியில் மரக்கன்று நடும் விழா: மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தொடங்கி வைத்தார்

தமிழகத்தின் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாக்கவும், பருவநிலை மாற்றத்தின் சவால்களை எதிர்கொள்ளவும் தமிழக முதலமைச்சரால் தொடங்கப்பட்ட ‘பசுமை தமிழ்நாடு இயக்கம்’ (Green Tamil Nadu Mission) தேனி மாவட்டத்தில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம், தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து நடத்திய பிரம்மாண்ட மரக்கன்று நடும் விழா, மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தலைமையில் நடைபெற்றது.

அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் பசுமைப் பரப்பை 23.7 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக உயர்த்துவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். விழாவில் பேசிய ஆட்சியர், ஆரோக்கியமான மனித வாழ்விற்கும், இயற்கைச் சீற்றங்களைத் தடுப்பதற்கும் மரங்கள் எவ்வளவு இன்றியமையாதவை என்பதை வலியுறுத்தினார். மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதன் மூலம், எதிர்காலத் தலைமுறைக்கு ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான தமிழ்நாட்டின் உறுதிப்பாட்டை இந்தத் திட்டம் வெளிப்படுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் அரசுத் துறைகளுடன் இணைந்து கோத்தாரி இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன் (KICL) மற்றும் எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் (ExNoRa) போன்ற அமைப்புகளும் கைகோர்த்துள்ளன. மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளர் சுகுமார், உதவி வனப் பாதுக்காவலர் செசில் கில்பர்ட், உதவித் திட்ட அலுவலர் ஜான் கென்னடி மற்றும் பசுமை தோழர் அஃப்ஷானா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் இதில் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர். அரசு மற்றும் தனியார் அமைப்புகளின் இந்த ஒருங்கிணைந்த முயற்சி, தேனி மாவட்டத்தைச் பசுமை மாவட்டமாக மாற்றுவதற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Exit mobile version