மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு இடையே, பிரதான சாலையில் மரம் விழுந்த விபத்தினால் சுற்றுலாப் பயணிகளின் பயணம் பல மணி நேரம் முடங்கியது. வத்தலக்குண்டு – கொடைக்கானல் மலைச்சாலையில் பெருமாள்மலை அடுக்கம் ரோடு அருகே நேற்று மதியம் வனப்பகுதியிலிருந்து திடீரென ராட்சத மரம் ஒன்று முறிந்து விழுந்தது. கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மலை நகரை நோக்கி வாகனங்களில் வந்து கொண்டிருக்கும் சூழலில், இந்த விபத்து நிகழ்ந்ததால் சில நிமிடங்களிலேயே மலைச்சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் கிடைத்தும் சம்பவ இடத்திற்கு விரைந்து வர முயன்ற நெடுஞ்சாலைத்துறையினர், நிலவிய கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக சம்பவ இடத்திற்கு வந்து சேருவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இதன் விளைவாக, சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகே மரம் வெட்டி அகற்றப்பட்டு போக்குவரத்து மெல்ல சீரானது. மணிக்கணக்கில் பசியோடும் குளிரோடும் வாகனங்களுக்குள் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள், குறிப்பாக முதியவர்களும் குழந்தைகளும் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதேபோல், கொடைக்கானல் மேல்மலைப் பகுதியான பூம்பாறை செல்லும் பாதையிலும் போக்குவரத்து நெரிசல் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. கிருஷ்ணன் கோயில் பகுதியில் ஏற்பட்ட கடும் நெரிசலால், அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த மோதலால் சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. காவல்துறையினர் நேரில் வந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய பின்னரே வாகனங்கள் நகரத் தொடங்கின. இந்த நெரிசலின் தாக்கம் மன்னவனூர் வரை நீடித்ததால், அப்பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காகச் சென்ற உள்ளூர் வாசிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகினர். மலைப் பாதைகளில் அதிகரித்து வரும் வாகனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், இதுபோன்ற விபத்துக் காலங்களில் விரைந்து செயல்படவும் மாவட்ட நிர்வாகம் கூடுதல் மீட்புப் படை வாகனங்களை மலைச் சாலைகளில் தயார் நிலையில் வைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
