சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மதியம் பெய்த அதிரடி கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவிய அதே வேளையில், நகரின் முக்கியப் பகுதியில் மின்மாற்றி (Transformer) வெடித்துத் தீப்பிடித்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக நிலவி வந்த வறண்ட வானிலைக்குப் பிறகு, இன்று மதியம் சரியாக 3:00 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, அடுத்த சில நிமிடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யத் தொடங்கியது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மழையினால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை பெய்து கொண்டிருந்த போதே, தேவகோட்டை ராம்நகர் பகுதியில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் அருகே அமைக்கப்பட்டிருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. மின்னல் தாக்கியதா அல்லது தொழில்நுட்பக் கோளாறா என்று தெரியாத நிலையில், வெடித்த சில வினாடிகளிலேயே டிரான்ஸ்பார்மரில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மக்கள் நடமாட்டம் மிகுந்த அலுவலகப் பகுதியில் ஏற்பட்ட இந்த விபத்தால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். இதனால் அப்பகுதி முழுவதும் உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதேபோல் தேவகோட்டை நகர் மட்டுமின்றி, அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களான சருகணி, ஆறாவயல் மற்றும் புளியால் உள்ளிட்ட இடங்களிலும் மழையின் தாக்கம் பரவலாக இருந்தது. சில இடங்களில் மிதமான மழையும், பல இடங்களில் பலத்த காற்றூடன் கூடிய கனமழையும் பதிவானது. இந்த மழையினால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன், விவசாய நிலங்களுக்குத் தேவையான நீர் வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தகவலறிந்த மின்சார வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தீயைக் கட்டுப்படுத்தியதுடன் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மழையின் போது மின்சாரக் கம்பிகள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நகரின் முக்கிய அலுவலகம் அருகே ஏற்பட்ட இந்த விபத்து காரணமாகச் சில மணிநேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கைச் சற்றே தடையானது.
