கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள மாட்டுப்பட்டி அணையில் சாகசப் பயணத்தில் ஈடுபட்ட தமிழக சுற்றுலாப் பயணி ஒருவர், பாராசூட் செயலிழந்ததால் அணையின் ஆழமான பகுதிக்குள் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாட்டுப்பட்டி அணையில் கேரள மின்வாரியத்தின் கீழ் இயங்கும் ‘ஹைடல் டூரிசம்’ அமைப்பு, தனியார் பங்களிப்புடன் ‘பாராசெயிலிங்’ (Para-sailing) எனும் சாகச விளையாட்டை நடத்தி வருகிறது. அதிவேகப் படகுடன் இணைக்கப்பட்ட பாராசூட்டில் அமர்ந்து ஆகாயத்தில் பறந்தபடி அணையின் அழகை ரசிக்கும் இந்த விளையாட்டுக்கு, ஒரு சுற்றுக்கு ரூ.1,800 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் 15-ஆம் தேதியன்று, தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் இதில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பாராசூட் கட்டுப்பாட்டை இழந்து அவர் அணைக்குள் விழுந்தார். அங்கிருந்த படகு ஓட்டுநர்கள் உடனடியாகச் செயல்பட்டு அவரை மீட்டதால் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து வெளியே தெரிந்தால் சாகச விளையாட்டுக்குத் தடை விதிக்கப்படும் என அஞ்சிய அதிகாரிகள், நடந்த விபத்தை ரகசியமாக மூடி மறைக்க முயன்றுள்ளனர். விபத்தில் சிக்கிய பயணியின் ரூ.15,000 மதிப்பிலான விலையுயர்ந்த கைக்கடிகாரம் பழுதடைந்ததால், அந்தத் தொகையை உடனடியாக ஈடுசெய்து அவரை அமைதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து ரகசியத் தகவல் அறிந்த மூணாறு சிறப்புப் பிரிவு போலீசார், மாட்டுப்பட்டி அணைக்கு நேரில் சென்று தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், விபத்து நடந்த அன்று பலத்த காற்று வீசியதால் பாராசெயிலிங் நடத்தக் கூடாத சூழல் இருந்தும், விதிமுறைகளை மீறி லாப நோக்கத்திற்காகப் பயணியை அனுமதித்தது தெரியவந்துள்ளது. பாதுகாப்பு உபகரணங்களின் தரம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இது குறித்த விரிவான விசாரணை அறிக்கையை உயர் அதிகாரிகளிடம் தாக்கல் செய்யப் போவதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
