திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இன்று காலை, திருநெல்வேலி நோக்கிச் சென்ற அதிவிரைவு ரயிலில் இருந்து சுமார் 17 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை ரயில்வே போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். புருலியாவிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் திருநெல்வேலி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (Purulia – Tirunelveli SF Express) ரயில் இன்று காலை திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது, ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில், சிறப்புச் சார்பு ஆய்வாளர் மணிகண்டன் மற்றும் காவலர்கள் மணிமாறன், லோகேஷ், கோமதி, சித்ரா ஆகியோர் அடங்கிய குழுவினர் ரயிலில் தீவிரச் சோதனையில் ஈடுபட்டனர்.
ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் (General Compartment) போலீஸார் சோதனை செய்தபோது, ஒரு இருக்கைக்கு அடியில் கேட்பாரற்று கிடந்த மர்மமான பேக் ஒன்றைக் கண்டெடுத்தனர். அந்தப் பேக்கைத் திறந்து பார்த்தபோது, அதனுள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 17 கிலோ எடையுள்ள குட்கா மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் போலீஸாரைக் கண்டதும் குட்கா பையை அங்கேயே விட்டுவிட்டுத் தப்பிச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைக் காவல் நிலையம் கொண்டு சென்ற போலீஸார், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், அந்தப் பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடமும், ரயில் நிலைய சிசிடிவி (CCTV) காட்சிகளையும் கொண்டு, இந்தத் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களைக் கடத்தி வந்த நபர்கள் யார் என்பது குறித்து ரயில்வே போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

















