கொழுமம் – நெய்க்காரப்பட்டி வழித்தடத்தில் பாதயாத்திரை பக்தர்களுக்கு தனிப்பாதை தேவை

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா நெருங்கி வரும் வேளையில், பல்வேறு மாவட்டங்களிலிருந்து பாதயாத்திரையாக வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடுதல் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. குறிப்பாக, பொள்ளாச்சி மற்றும் கேரளா வழித்தடத்திலிருந்து வரும் பக்தர்கள் பயன்படுத்தும் கொழுமம், பாப்பம்பட்டி மற்றும் நெய்க்காரப்பட்டி சாலைகளில் பக்தர்களுக்கெனத் தனிப் பாதயாத்திரை பாதை (Pedestrian Track) அமைத்துத் தர வேண்டும் எனப் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தற்போது திண்டுக்கல், செம்பட்டி, ஒட்டன்சத்திரம் மற்றும் தாராபுரம் வழியாகப் பழநிக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகத் திண்டுக்கல் சாலை மற்றும் தாராபுரம் சாலைகளில் நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஓரத்தில் தனிப் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது பக்தர்களை அதிவேகமாக வரும் வாகன விபத்துகளிலிருந்து பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதேபோல், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் பாலக்காடு பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் மடத்துக்குளம் வழியாகப் பழநிக்கு வரத் தனிப்பாதைகள் உள்ளன. ஆனால், அண்மையில் அமைக்கப்பட்ட புதிய நான்கு வழிச்சாலையில் பக்தர்கள் பாதுகாப்பாக நடந்து செல்லத் தனிப்பாதை வசதிகள் போதுமானதாக இல்லை.

குறிப்பாக பாலக்காடு, வால்பாறை, ஆனைமலை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், பிரதான சாலையைத் தவிர்த்து தூரம் குறைவு என்பதால் கொழுமம், நெய்க்காரப்பட்டி வழியாக வரும் உள்வட்டச் சாலைகளையே அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர். குறுகலான இந்தச் சாலைகளில் கனரக வாகனப் போக்குவரத்து மற்றும் பேருந்து இயக்கம் அதிகமுள்ள நிலையில், பக்தர்கள் சாலையின் ஓரத்தில் உயிருக்கு ஆபத்தான முறையில் நடந்து செல்லும் சூழல் நிலவுகிறது. இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதி இல்லாதது விபத்து அச்சத்தை மேலும் அதிகரிக்கிறது. எனவே, தைப்பூசத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே, கொழுமம் – நெய்க்காரப்பட்டி வழித்தடத்தில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ தனிப் பாதயாத்திரை பாதையை ஏற்படுத்தித் தர நெடுஞ்சாலைத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் எனப் பாசன விவசாயிகள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version