தூத்துக்குடியில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலைத் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் கிளை மற்றும் தூத்துக்குடி மாவட்டக் கிளை ஆகியவை இணைந்து, இன்றைய இளைய தலைமுறையினரை அச்சுறுத்தி வரும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் மனஅழுத்தத்தால் ஏற்படும் தற்கொலை எண்ணங்களுக்கு எதிராக மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி காலை 11:30 மணியளவில் கல்லூரியின் உள் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வு, மாணவர்களிடையே மன உறுதி மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் ஒரு தளமாக அமைந்தது. தற்காலச் சூழலில் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் தங்களைத் தற்காத்துக் கொள்வதும், இக்கட்டான சூழலில் தற்கொலை முடிவுகளைத் தவிர்த்து மனநலத்தைப் பேணுவதும் மிக அவசியமான ஒன்றாகும்.

நிகழ்ச்சியின் தொடக்கமாகக் கணிதத் துறைத் தலைவரும் உதவிப் பேராசிரியருமான மாலதி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கல்லூரி முதல்வர் இலங்குமாறன் தனது தலைமையுரையில், கல்வியோடு சேர்த்து ஒழுக்கமும் மன வலிமையும் கொண்ட மாணவர்களை உருவாக்குவதே இத்தகைய நிகழ்வுகளின் நோக்கம் எனத் தெரிவித்தார். இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக் கிளைத் தலைவர் டாக்டர் வசீகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசுகையில், போதைப்பொருள் பயன்பாடு என்பது ஒரு தனிமனிதனைச் சிதைப்பதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த குடும்பத்தையும் சமூகத்தையும் எவ்வாறு சீரழிக்கிறது என்பதைக் குறித்தும், முறையான மனநலப் பாதுகாப்பின் அவசியம் குறித்தும் விரிவாக விளக்கினார். மாவட்டக் கிளை மேலாண்மைக் குழு உறுப்பினர் முகவர் கருப்பசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

கருத்தரங்கின் முக்கியப் பகுதியில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மனநலத் துறை மூத்த உதவிப் பேராசிரியர் டாக்டர் ஸ்ரீராம், தற்கொலைத் தடுப்பு முறைகள் குறித்துப் பேசினார். எத்தகையத் தோல்விகளையும், மனப் போராட்டங்களையும் எதிர்கொள்ளும் வலிமையை வளர்த்துக் கொள்வது குறித்தும், மன அழுத்தம் ஏற்படும்போது தகுந்த நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவதன் முக்கியத்துவம் குறித்தும் அவர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டினார். அதனைத் தொடர்ந்து, நார்கோட்டிக் இன்டெலிஜென்ஸ் பீரோ (CID) காவல் ஆய்வாளர் அனிதா வேணி அவர்கள் பேசுகையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராகக் காவல்துறை எடுத்து வரும் கடுமையான நடவடிக்கைகள் மற்றும் போதைப்பொருள் சட்டங்கள் குறித்து விளக்கினார். சட்டத்திற்குப் புறம்பான இத்தகையச் செயல்களில் ஈடுபடுபவர்கள் சந்திக்கும் பின்விளைவுகள் குறித்தும் அவர் எச்சரித்தார்.

நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ்த் துறைத் தலைவரும் உதவிப் பேராசிரியருமான ஜெயவசந்தி நன்றி கூற, ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியர் கிருஷ்ண பிரியா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் தற்கொலைத் தடுப்பு குறித்து மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டதுடன், சமூகத்தில் இது குறித்த விழிப்புணர்வைப் பரப்புவோம் என உறுதியளித்தனர். தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இக்கருத்தரங்கில் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.

Exit mobile version