மதுரை மாநகரின் சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய மைல்கல்லாக, ‘சோழன் டூர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் பெண்களுக்கான பிரத்யேக ‘இ-ஆட்டோ’ ஓட்டுநர் திட்டம் நேற்று கோலாகலமாகத் தொடங்கி வைக்கப்பட்டது. அழகர்கோயில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த விழாவில், முதற்கட்டமாகப் பயிற்சி பெற்ற 13 பெண்கள் தங்களது சுற்றுச்சூழல் நட்பு கொண்ட மின்சார ஆட்டோ சேவையைத் தொடங்கினர். கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகச் சுற்றுலாத் துறையில் சர்வதேச அளவில் தடம் பதித்து வரும் சோழன் டூர்ஸ் நிறுவனம், தனது 2025-ஆம் ஆண்டிற்கான சமூகப் பொறுப்புணர்வு இலக்காகப் ‘பெண்கள் அதிகாரம் அளித்தல்’ (Women Empowerment) என்பதை அறிவித்துள்ளது. ஐந்து தேசிய விருதுகள் மற்றும் பல மாநில விருதுகளைக் வென்ற இந்நிறுவனம், தற்போது மதுரையில் பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்திற்காக இந்த முன்னோடி முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய சோழன் டூர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பாண்டியன் குமரவேல், “ஒரு வணிகத்தின் உண்மையான வெற்றி என்பது ஈட்டும் லாபத்தில் மட்டும் இல்லை; அது சமூகத்தில் ஏற்படுத்தும் ஆக்கப்பூர்வமான மாற்றத்தில்தான் உள்ளது. மதுரையில் தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பான நகரப் போக்குவரத்திற்கு ஒரு முன்னுதாரணமாக அமையும்” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இத்திட்டத்தில் இணைந்துள்ள பெண்களுக்கு வெறும் வாகனம் ஓட்டும் பயிற்சி மட்டுமல்லாமல், சுற்றுலாப் பயணிகளைக் கையாளும் விதம், மென்திறன் பயிற்சிகள் (Soft Skills) மற்றும் அடிப்படைச் சுற்றுலாத் தலங்கள் குறித்த விரிவான அறிவு ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் மதுரைக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள், குறிப்பாக முதியவர்கள் மற்றும் பெண்கள் எவ்வித அச்சமுமின்றிப் பயணிக்க முடியும்.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சுற்றுலாத்துறை தென்மண்டல இயக்குநர் வெங்கடேசன் பேசுகையில், “தமிழகச் சுற்றுலாத் துறையின் மையப்புள்ளியாகத் திகழும் மதுரைக்கு இத்தகைய திட்டங்கள் மிக அவசியம். தற்போது தமிழகம் முழுவதும் ‘பிங்க் ஆட்டோ’ மற்றும் ‘இ-ஆட்டோ’ கலாச்சாரம் அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது. இது பெண்களுக்குச் சுயவேலைவாய்ப்பை வழங்குவதோடு, கௌரவமான வருமானத்திற்கும் வழிவகுக்கும்” என்றார். மதுரை மாநகரப் போக்குவரத்துத் துறை துணை காவல் ஆணையர் வனிதா மற்றும் மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா தேவி ஆகியோர் பெண் ஓட்டுநர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்தத் திட்டத்தின் மூலம் மதுரையின் சாலைகளில் இனி பெண்களின் பாதுகாப்பான சாரத்தியத்தில் மின்சார ஆட்டோக்கள் வலம் வரவுள்ளன. இது மதுரை மாநகரத்தின் பசுமைப் போக்குவரத்து மற்றும் பெண் முன்னேற்றத்திற்கு ஒரு வலிமையான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















