பெள்ளாதி குளத்தில் மண் அரிப்பு உடைப்பு ஏற்படும் முன் மணல் மூட்டைகளை அடுக்கி கரையை பலப்படுத்த கோரிக்கை

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பெள்ளாதி ஊராட்சியில், சுமார் 110 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பெள்ளாதி குளம் தற்போது பெரும் ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. கட்டாஞ்சி மலை, மருதூர் மற்றும் ஏழு எருமை பள்ளம் போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் மழைநீரோடு, அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் மூலமும் இக்குளத்திற்குத் தண்ணீர் வரத்து சீராக உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக, 30 அடி உயரமுள்ள இக்குளம் அதன் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவது ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், தேங்கியுள்ள தண்ணீரின் கடும் அழுத்தம் மற்றும் அலைகளின் சீற்றம் காரணமாக குளத்தின் கரைகளில் பலத்த மண் அரிப்பு ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் குளத்தைச் சுற்றியுள்ள சுமார் இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், கிணறுகளில் நீரூற்று அதிகரித்து விவசாயம் செழிப்புடன் காணப்படுகிறது. மேலும், இந்த நீர்நிலையை வாழ்வாதாரமாகக் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மீனவர் சங்க நிர்வாகி நடராஜன் மற்றும் உள்ளூர் விவசாயிகள் கூறுகையில், குளத்தின் கரைகளில் வளர்ந்துள்ள முள் செடிகள் மற்றும் புதர்களின் வேர்கள் கரையின் அடிப்பகுதி வரை ஊடுருவியுள்ளதால், கரையின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது. பல இடங்களில் மண் சரிந்து விரிசல்கள் காணப்படுவதால், பலத்த காற்று வீசும் போதோ அல்லது மழைப்பொழிவு அதிகரிக்கும் போதோ கரை உடையும் அபாயம் நிலவுகிறது.

ஒருவேளை கரை உடைந்தால், குளத்தில் உள்ள லட்சக்கணக்கான கன அடி நீர் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பெரும் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாழாகும் என்றும் விவசாயிகள் எச்சரிக்கின்றனர். எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கும் முன்பாக, மாவட்ட நிர்வாகமும் நீர்வளத்துறை அதிகாரிகளும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, மண் அரிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் உடனடியாக மணல் மூட்டைகளை அடுக்கி கரையைப் பலப்படுத்த வேண்டும் என்றும், கரைகளில் மண்டியுள்ள புதர்களை அகற்றி குளத்தைப் பராமரிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பருவமழை தீவிரமடைவதற்குள் இந்தத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என இப்பகுதி சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Exit mobile version