மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய விரிவாக்கப் பணிகள், கட்டுமானக் குளறுபடிகளால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பணிகள் முழுமையாக நிறைவடைவதற்கு முன்பே, கட்டிடத்தின் தூண்கள் மற்றும் சுவர்களில் நீண்ட விரிசல்கள் ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் மற்றும் பயணிகளிடையே கடும் அதிருப்தியையும், பாதுகாப்பு குறித்த அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வசதிகளை மேம்படுத்தவும் கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழக அரசு ரூ.8 கோடி நிதி ஒதுக்கியது. இதனைத் தொடர்ந்து, 2023 ஜூலை மாதம் பழைய பேருந்து நிலையத்தைப் புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. இடவசதி பற்றாக்குறையைத் தவிர்க்க, ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் இருந்த சுமார் 7.85 ஏக்கர் சந்தை திடல் நிலம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டு, கூடுதல் பரப்பளவில் விரிவாக்கப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தற்போது பிரதான கட்டிடப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில், அண்மையில் கட்டப்பட்ட பிரதான கட்டிடத்தின் பலமான தூண்களில் (Pillars) ஒன்றில், மேலிருந்து கீழ் வரை நீண்ட இடைவெளியுடன் கூடிய விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், கடைகளுக்காக எழுப்பப்பட்ட சுவர்களில் சிமெண்ட் பூசப்பட்டு, சுண்ணாம்பு அடிக்கப்பட்ட பிறகும், இருபுறமும் ஆழமான விரிசல்கள் தென்படுகின்றன. இது குறித்துக் கருத்து தெரிவித்துள்ள கட்டுமானப் பொறியாளர்கள், “தூண்களுக்காகப் பயன்படுத்தப்படும் இரும்புக் கம்பிகள் துருப்பிடித்துத் தன்மையை இழக்கும்போதோ அல்லது கலவையின் தரம் குறையும்போதோ இது போன்ற விரிசல்கள் ஏற்படும். இதனை உடனடியாகச் சரி செய்யாவிட்டால் கட்டிடத்தின் ஆயுட்காலம் குறைவதோடு, விபத்துகளுக்கும் வழிவகுக்கும்” என எச்சரிக்கின்றனர்.
இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, நகராட்சிப் பொறியாளர் சசிக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். விரிசல் விழுந்த பகுதிகள் கண்டறியப்பட்டு, அவை முறையாகச் சரி செய்யப்படும் என அவர் உறுதி அளித்துள்ளார். இருப்பினும், தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் முதியவர்கள் பயன்படுத்தப் போகும் ஒரு பொதுக் கட்டிடத்தில், இவ்வளவு பெரிய முறைகேடு அல்லது அலட்சியம் நிகழ்ந்திருப்பது கண்டிக்கத்தக்கது எனச் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். அதிகாரிகள் வெறும் கண்துடைப்பு வேலை செய்யாமல், கட்டுமானத்தின் உறுதித்தன்மையை (Structural Stability) வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்த பின்னரே திறக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
















