கல்வி என்பது அனைவருக்கும் உரிமையானதுதான் என்ற உண்மையை மீண்டும் நிரூபித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட். கர்நாடகாவை சேர்ந்த ஒரு ஏழை மாணவிக்கு உயர்கல்வி பயில உதவியுள்ளார். இதற்காக சமூக வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.
பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி கனாபுர் என்ற மாணவி, பள்ளிப்படிப்பில் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்று, கல்லூரியில் பிசிஏ படிக்க விரும்பினார். ஆனால் அவரது குடும்பத்தின் பொருளாதார நிலைமை குறைவாக இருந்ததால், மேல்படிப்பை தொடர முடியாமல் தவித்தார். ஜோதியின் தந்தை ஒரு சிறிய டீக்கடையை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், ஜோதியின் பெற்றோர், தங்களுக்குத் தெரிந்த அனில் என்பவரிடம் உதவிக்காக கூறினர். அந்த அனில், பெங்களூருவில் உள்ள தனது கிரிக்கெட் நண்பர்கள் மூலம், ரிஷப் பந்த்தின் கவனத்திற்கு இந்த தகவலை கொண்டு சென்றார்.
இதையறிந்த ரிஷப் பண்ட், மாணவிக்காக ரூ.40,000ஐ நேரடியாக கல்லூரி நிர்வாகத்திடம் செலுத்தி, அவருடைய கனவுகளுக்கு தோளாக நின்றுள்ளார்.
இந்த உதவிக்கு நன்றியை தெரிவிக்க, மாணவி ஜோதி எழுதியுள்ள கடிதத்தில், “நான் பி.யு.சி.யை முடித்துவிட்டு பிசிஏ படிக்கவேண்டும் என்ற கனவில் இருந்தேன். ஆனால் நிதியில்லாமல் தவித்தேன். அனில் அண்ணாவை அணுகினேன். அவர் நண்பர்களைத் தொடர்பு கொண்டார். அவர்கள் ரிஷப் பந்தை தொடர்பு கொண்டனர். அவர் எனக்கு உதவி செய்தார். கடவுள் அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் வாழ்த்துகளையும் வழங்கட்டும்,” என தெரிவித்துள்ளார்.
உடல் காயத்திலிருந்து மீண்டுவரும் நிலையிலும் மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடும் ரிஷப் பண்டின் செயலுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்களும், பொதுமக்களும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.