திண்டுக்கல் மாவட்டம் பரப்பலாறு அணையின் பாசனப் பரப்பிற்கு உட்பட்ட ஓட்டக்குளம், போதிய பராமரிப்பின்றி வறண்டு கிடப்பதால் அதனை நம்பியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாலைவனமாகும் அபாயத்தில் உள்ளன. பரப்பலாறு அணையிலிருந்து நீர் திறந்துவிடப்படும் போது, பெருமாள் குளம் நிரம்பி அதன் உபரி நீர் மூலம் ஓட்டக்குளம் நீர்வரத்தைப் பெறுகிறது. இக்குளம் நிரம்பினால் மட்டுமே இப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிணறுகள் மற்றும் போர்வெல்களில் தண்ணீர் கிடைக்கும். ஆனால், தற்போது பெருமாள் குளத்திலிருந்து ஓட்டக்குளத்திற்கு நீர் கொண்டு வரும் வரத்துக் கால்வாய்கள் பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாததால், செடி கொடிகள் முளைத்துப் புதர் மண்டி காணப்படுகின்றன. இதனால் மழைக்காலங்களில் கூட ஒரு சொட்டுத் தண்ணீர் குளத்திற்கு வந்து சேராத அவல நிலை நீடிக்கிறது.
இந்த நீர்வரத்துக் கால்வாய் மேடான பகுதியில் அமைந்துள்ளதால், சுமார் 10 அடி முதல் 20 அடி ஆழம் வரை பொதுப்பணித்துறையினரால் ஆழப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கனமழை பெய்யும் நேரங்களில் கால்வாயின் கரைகளில் உள்ள மண் சரிந்து விழுந்து வாய்க்கால் மேடாகி விடுகிறது. இதனைச் சீரமைக்க வேண்டிய அதிகாரிகள் மெத்தனமாக இருப்பதால், தூர்ந்து போன வாய்க்கால் வழியாக நீர் செல்ல வழியில்லாமல் ஓட்டக்குளம் வறண்டு காணப்படுகிறது. “வெறும் தூர்வாரும் பணியோடு நிறுத்திக் கொள்ளாமல், வருங்காலத்தில் மண் சரிவைத் தடுக்கவும், நீர் இழப்பைக் குறைக்கவும் வாய்க்காலைச் சிமெண்ட் தளத்துடன் கூடிய கான்கிரீட் சுவர்கள் கொண்ட வாய்க்காலாக மாற்ற அரசு நிதி ஒதுக்க வேண்டும்” என்று விவசாயி ஹரிஹரன் வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல், ஓட்டக்குளத்தின் உட்பகுதியிலும் ஆகாயத்தாமரை மற்றும் முட்புதர்கள் மண்டிக் கிடப்பதால் குளத்தின் கொள்ளளவு குறைந்து வருகிறது. குளத்தின் கரைகளைப் பலப்படுத்தி, நீர் வெளியேறும் மடைப் பகுதிகளில் உள்ள அடைப்புகளை நீக்க வேண்டும் எனப் பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயி பழனிமுத்து கூறுகையில், “பெருமாள் குளத்திலிருந்து ஓட்டக்குளம் வரும் வாய்க்கால் மட்டுமன்றி, அங்கிருந்து பாப்பான் குளம் மற்றும் காவேரியம்மாபட்டி பெரிய குளத்திற்குச் செல்லும் தொடர் நீர்வரத்து வாய்க்கால்களையும் முழுமையாகத் தூர்வார வேண்டும். அப்போதுதான் கடைமடை வரை நீர் தடையின்றிச் சென்று சேரும்” என்றார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாகக் கள ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
