மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்யக் கோரி ‘இந்தியா’ கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புகார் நோட்டீஸ் கொடுத்துள்ள நிலையில், கடந்த எட்டு ஆண்டுகளில் அவர் விசாரித்து முடித்த வழக்குகளின் அபாரமான எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் தற்போது வெளியாகி, அவருக்கு ஆதரவாகப் பலத்த எதிர்ப்புக் குரலை எழுப்பியுள்ளன.
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், சமீபத்தில் திருப்பரங்குன்றம் மலை மீதான தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) தலைமையிலான தமிழக அரசு எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்தச் சூழலில், நீதிபதி சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வர வலியுறுத்தி, ‘இந்தியா’ கூட்டணிக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் தயாரிக்கப்பட்ட நோட்டீஸ், சபாநாயகரிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு முன்னரே, நீதிபதியின் தீர்ப்புகள் குறித்து ஆளும் கட்சித் தலைவர்கள் விமர்சனம் செய்த நிலையில், வழக்கறிஞர்கள் சங்கங்கள் அவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர்.
இந்த அரசியல் சர்ச்சைகளுக்கு மத்தியில், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் பணித்திறன் குறித்த அதிகாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளன.
பணி காலம்: 2017 முதல் 2025 வரை (8 ஆண்டுகள்) முக்கிய வழக்குகள் (பிரதான வழக்குகள்): சிவில், கிரிமினல், மேல்முறையீடு, ரிட் மனுக்கள் உள்ளிட்ட 73,505 வழக்குகள். பிற வழக்குகள் (மிசலேனியஸ் வழக்குகள்): ஜாமீன் மனுக்கள் உள்ளிட்ட 46,921 வழக்குகள். மொத்தம்: எட்டு ஆண்டுகளில் அவர் விசாரித்து உத்தரவு பிறப்பித்த வழக்குகளின் மொத்த எண்ணிக்கை 1,20,426 ஆகும். தினமும் காலையில் 9 மணிக்கே வழக்குகளை விசாரிக்கத் தொடங்கும் நீதிபதி, இரவு நேரம் எவ்வளவு ஆனாலும் தனது பணியைக் கடமையாகச் செய்து முடிக்கத் தவறியதில்லை என்று வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பாராட்டி வருகின்றனர்.
நீதிபதி சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்யக் கோரி ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் மனு அளித்த நிலையில், அவரது பணி குறித்த சாதனைப் புள்ளிவிவரங்கள் வெளியானதைக் கண்டு வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகள் அவருக்கு ஆதரவாகப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பா.ஜ.க.வின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில், “மிக விரைவாக வழக்குகளை முடித்து வைக்கும் கடமையுணர்வு, காலை 9 மணிக்குத் தொடங்கி இரவு எவ்வளவு நேரமானாலும் வழக்குகளை விசாரிக்கும் ஆற்றல், கடந்த எட்டு ஆண்டுகளில் 73,505 வழக்குகளை முடித்து வைத்திருக்கும் சாதனை, யாருக்கும் அஞ்சாத நேர்மையான, தெளிவான பணி என நீதிபதி சுவாமிநாதனின் பணித் தரம் வெளிப்படுகிறது. இப்போது புரிகிறதா, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ‘திராவிட மாடல்’ ஏன் துடிக்கிறது என்று? வழக்குகள் இல்லையென்றால், தங்களின் பிழைப்பு போய்விடுமே என்று திராவிட மாடல்கள் அஞ்சுவது இயல்பு தானே?” என்று குற்றம் சாட்டியுள்ளார். சட்டப்பூர்வ கடமையை நேர்மையுடனும் விரைவுடனும் ஆற்றி சாதனை படைத்த ஒரு நீதிபதிக்கு எதிராக அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ள இந்தச் சம்பவம், நீதித்துறை சுதந்திரம் குறித்த விவாதங்களை மீண்டும் கிளப்பிவிட்டுள்ளது.
