தேனி மாவட்டம் பழனிச்செட்டிபட்டி போலீசார் நடத்திய அதிரடி வாகனச் சோதனையில், ஆந்திர மாநிலத்திலிருந்து பேருந்து மூலம் கடத்தி வரப்பட்ட சுமார் 3.6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 12 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாகப் பல்வேறு மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளி ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பழனிச்செட்டிபட்டி காவல் சார்பு ஆய்வாளர் அருண்பாண்டி தலைமையிலான தனிப்படை போலீசார், திண்டுக்கல் – குமுளி புறவழிச்சாலையில் உள்ள போடி விலக்கு பகுதியில் இன்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தில் இருந்து இறங்கிய நபர் ஒருவர், போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரை மடக்கிப் பிடித்து அவர் வைத்திருந்த பைகளைச் சோதனை செய்தனர்.
அதில், சிறு சிறு பொட்டலங்களாகக் கட்டப்பட்ட நிலையில் 12 கிலோ கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. விசாரணையில், அவர் கம்பம் கோம்பை ரோடு, உத்தமபுரம் பகுதியைச் சேர்ந்த முருகன் (45) என்பது தெரியவந்தது. இவர் ஆந்திர மாநிலத்திலிருந்து குறைந்த விலைக்குக் கஞ்சாவை வாங்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குப் பேருந்து மூலம் கடத்தி வந்து, அதிக விலைக்கு விற்பனை செய்யத் திட்டமிட்டிருந்தது அம்பலமானது. அவரிடமிருந்து 12 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இரண்டு அலைபேசிகளைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட முருகன் ஒரு சாதாரணக் குற்றவாளி அல்ல என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் மீது ஏற்கனவே தேனி, கம்பம், அல்லிநகரம் ஆகிய மாவட்டப் பிரிவுகள் மட்டுமன்றி, கோவை, வேலூர் (காட்பாடி), மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டக் காவல் நிலையங்களிலும் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒரு மாவட்டத்தில் பிடிபட்டால் மற்றொரு மாவட்டத்திற்குத் தனது தளத்தை மாற்றி, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தச் சட்டவிரோதத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தற்போது முருகன் மீது மீண்டும் வழக்குப் பதிவு செய்துள்ள பழனிச்செட்டிபட்டி போலீசார், அவருக்குப் பின்னால் செயல்படும் கஞ்சா மொத்த வியாபாரிகள் மற்றும் ஆந்திராவில் அவருக்குத் தொடர்பில் உள்ள நபர்கள் குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் கஞ்சா நடமாட்டத்தைத் தடுக்கக் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
