ஜவுளித்துறையில் புதிய புரட்சி: கோவையில் மார்ச் 6 முதல் தொடங்கும் ‘சைமா டெக்ஸ்பேர் 2026’ உலகக் கண்காட்சி!

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூரில், ஜவுளித்துறையின் பிரம்மாண்ட சங்கமமான ‘சைமா டெக்ஸ்பேர் 2026’ (SIMA Texfair 2026) உலகக் கண்காட்சி வரும் மார்ச் 6-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை கொடிசியா (CODISSIA) வளாகத்தில் நடைபெற உள்ளது. தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (SIMA) சார்பில் கடந்த 2001-ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தக் கண்காட்சி, இந்த ஆண்டு தனது 15-வது பதிப்பை எட்டியுள்ளது. ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் நுகர்வோரை ஒரே கூரையின் கீழ் இணைக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட இக்கண்காட்சி, கடந்த 25 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. 186 கண்காட்சியாளர்களுடன் தொடங்கி, தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்க்கும் சர்வதேசத் தரத்திலான நிகழ்வாக இது பரிணமித்துள்ளது.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள 15-வது சைமா டெக்ஸ்பேர் கண்காட்சி குறித்துச் சங்கத்தின் தலைவர் துரை பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இம்முறை 240-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் நவீனச் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார். கோவை, மும்பை, அகமதாபாத் போன்ற இந்திய நகரங்கள் மட்டுமின்றி சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, இத்தாலி மற்றும் எகிப்து போன்ற வெளிநாடுகளிலிருந்தும் உற்பத்தியாளர்கள் இதில் பங்கேற்கின்றனர். ஜவுளித்துறையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப மாற்றங்களை நேரடியாகக் காண சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காட்சியின் தொடக்க விழாவில் ராம்கோ குழுமத் தலைவர் பி.ஆர். வெங்கட்ராம ராஜா கலந்து கொண்டு கண்காட்சியைத் திறந்து வைக்கிறார். இந்திய ஜவுளி சம்மேளனத் தலைவர் அஸ்வின் சந்திரன் விழாவுக்குத் தலைமை தாங்க, மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சக இயக்குநர் எஸ்.சுரேஷ் பாபுஜி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். மேலும், டெல்லியைச் சேர்ந்த வசிர் அட்வைசர்ஸ் நிறுவனத்தின் இணை இயக்குநர் பிரசாந்த் அகர்வால், உலகளாவிய ஜவுளிச் சந்தை நிலவரம், வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் முதலீட்டுத் திட்டமிடல் குறித்துச் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

ஜவுளித்துறையின் வளர்ச்சிக்காகத் மத்திய அரசு எடுத்துள்ள பல்வேறு கொள்கை முடிவுகள் இத்துறைக்கு ஊக்கமளிப்பதாகச் சைமா தலைவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுடனான வரியில்லா ஒப்பந்தங்கள், செயற்கைப் பஞ்சு மீதான குவிப்பு வரி நீக்கம், ஜிஎஸ்டி விகிதம் 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டது மற்றும் பருத்தி உற்பத்தித் திறன் மேம்பாட்டுத் திட்டம் போன்றவை ஜவுளித்துறையின் அடுத்தகட்ட நகர்வுக்குப் பெரும் உதவியாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் சிறப்பம்சமாக, மார்ச் 6-ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் ‘சைமா யுஐ உச்சிமாநாடு’ (SIMA UI Summit) முதன்முறையாக நடத்தப்படுகிறது. இதில் ஜவுளித் தொழிலில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தானியக்கத் தொழில்நுட்பங்கள் (Automation) புகுத்தப்படுவது குறித்து விரிவான கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன. தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியில் ஜவுளித் தொழில் முனைவோர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு பயன்பெறுமாறு சைமா தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.

Exit mobile version