வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கத்தால் கோவை, நீலகிரி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் தற்போது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் தாழ்வுப் பகுதி உருவாகும் வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும் என வானிலை மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் வரும் 28ஆம் தேதி வரை மழைத் தாக்கம் தொடரும் என்றும், குறிப்பாக 26ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனுடன், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தெற்கு ஆந்திர கடலோரம் மற்றும் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் 28ஆம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

















