செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவிலில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :
“வரவிருக்கும் தேர்தல்களில், எங்கள் கட்சி தனித்து போட்டியிடுமா அல்லது பிற கட்சிகளுடன் கூட்டணியில் இணையுமா என்பதை விரைவில் தெரிந்து கொள்ளலாம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விஜயை கூட்டணிக்கு அழைப்பதைப் பார்த்தால், தனித்து நிற்கும் தைரியம் இல்லாமல் இருப்பது போல் தோன்றுகிறது,” என்றார்.
அவர் மேலும் கூறியதாவது, “விஜய் தலைமையில் ஒரு புதிய கூட்டணி உருவாகும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் நான்கு முனை கூட்டணி உருவாகி, எதிர்பாராத அரசியல் மாற்றங்கள் நிகழக்கூடும்,” என தினகரன் தெரிவித்தார்.
அதே நேரத்தில், தமிழ்நாட்டில் கல்வி வளர்ந்திருந்தாலும், பெரியார் போன்ற தலைவர்களின் சிந்தனைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதையும், இதுபோன்ற ஆணவப் படுகொலைகள் தொடர்ந்து நடப்பது வருந்தத்தக்கது என்றும் கூறினார்.
“இத்தகைய சம்பவங்களுக்கு எதிராக நீதிபதி தலைமையிலான விசாரணை குழு அமைத்து சட்டம் இயற்றுவது வரவேற்கத்தக்கது,” எனவும் தினகரன் பாராட்டினார்.
திமுக குறித்து பேசிய அவர், “அந்தக் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மக்களை எதிர்கொள்ள முடியாது. வாக்குறுதிகளை நிறைவேற்றினால்தான் அடுத்த தேர்தலில் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்,” எனவும் குறிப்பிட்டார்.

















