நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் அருகே, பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி இருந்த ஒரு பாழடைந்த வீட்டில் இருந்து ஆண் ஒருவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோத்தகிரி சக்திமலை செல்லும் சாலையில் அமைந்துள்ள இந்த வீடு, முன்னாள் வங்கி ஊழியரான மேத்யூ என்பவருக்குச் சொந்தமானது. மேத்யூ மறைந்த பிறகு, அவரது குடும்பத்தினர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பே கோவையில் குடியேறிவிட்டனர். இதனால், அந்த வீடு நீண்ட காலமாக ஆள் நடமாட்டமின்றி, பராமரிப்பின்றி பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்து வந்தது.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மேத்யூவின் மகன் பிரசாந்த் தனது குடும்ப வீட்டைச் சீரமைக்கத் தீர்மானித்தார். இதற்காகத் தனது நண்பரும், கோத்தகிரியைச் சேர்ந்த மின் பணியாளருமான சசி என்பவரைத் தொடர்பு கொண்டு, வீட்டைச் சுத்தம் செய்து மின் இணைப்புகளைப் புதுப்பித்துத் தருமாறு கோரியிருந்தார். அதன்படி, நேற்று (ஜனவரி 9, 2026) சசி மற்றும் அவரது பணியாளர்கள் வீட்டைத் திறந்து உள்ளே சென்றபோது, அங்கு நிலவிய காட்சிகள் அவர்களை நிலைகுலையச் செய்தன. வீட்டின் படுக்கையறையில் உள்ள மெத்தையின் மீது, ஆண் ஒருவரது உடல் முழுவதுமாக அழுகி, வெறும் எலும்புக்கூடாகக் கிடப்பதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தகவலறிந்த கோத்தகிரி காவல் ஆய்வாளர் ஜீவானந்தம் தலைமையிலான போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். வீட்டின் உரிமையாளர் முன்னிலையில் உடல் மீட்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், அந்த வீடு நீண்ட நாட்களாகப் பூட்டிக்கிடந்ததைச் சாதகமாகப் பயன்படுத்தி, மதுப்பிரியர்கள் அல்லது சமூக விரோதிகள் யாரேனும் ஜன்னல் வழியாகவோ அல்லது கதவை உடைத்தோ உள்ளே நுழைந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எலும்புக்கூடாகக் கிடந்த நபர், அங்குத் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் இறந்திருக்கலாம் அல்லது தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
உடல் முற்றிலும் சிதைந்து அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதால், இறந்து கிடப்பவர் யார்? அவர் எப்போது இறந்தார்? என்பது போன்ற விபரங்களை அறிய ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து தடயவியல் மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே முதற்கட்ட உடற்கூறு ஆய்வு செய்யப்பட உள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாயமானவர்கள் குறித்த புகார்களைப் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த ராம்சந்த் சதுக்கம் அருகே, ஒரு வீட்டின் படுக்கையறையிலேயே 13 ஆண்டுகளாக யாரும் அறியாமல் ஒரு மனித உடல் எலும்புக்கூடாக மாறியிருப்பது அப்பகுதி மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.

















