தருமபுரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் (ஆவின்) பால் மற்றும் பால் உபபொருட்களின் தரத்தினை சர்வதேசத் தரத்திற்கு இணையாகப் பரிசோதனை செய்யும் வகையில், ரூ.47.05 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நவீன நுண்ணுயிரியல் ஆய்வகக் கட்டடத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, தருமபுரி ஆவின் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ரெசதீஸ் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி வைத்ததுடன், ஆய்வகத்தில் நிறுவப்பட்டுள்ள நவீன உபகரணங்களின் செயல்பாடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை பால் உற்பத்தி ஒரு முக்கிய வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. தற்போதைய நிலவரப்படி, இந்த ஒன்றியத்தின் கீழ் 246 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களும், 39 தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்களும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் உள்ள சங்கங்கள் வாயிலாக நாளொன்றுக்குச் சராசரியாக 1.50 லட்சம் லிட்டர் பால் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் சுமார் 7,000 லிட்டர் பால் தருமபுரி மாவட்ட மக்களின் உள்ளூர் தேவைக்காக விநியோகிக்கப்படுகிறது. மீதமுள்ள சுமார் 1.43 லட்சம் லிட்டர் பால், சென்னை மாநகர மக்களின் தினசரித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காகத் தலைநகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம் 2024–25ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய ஆய்வகத்தின் மூலம், கொள்முதல் செய்யப்படும் பாலின் தரம் உடனுக்குடன் துல்லியமாக ஆய்வு செய்யப்படும். குறிப்பாக, பாலில் இருக்கக்கூடிய கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரிகளைக் கண்டறிந்து, பாலின் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்யவும், பாலின் மூலம் மனிதர்களுக்குப் பரவக்கூடிய தொற்று நோய்களைத் தடுக்கவும் இந்த ஆய்வகம் ஒரு அரணாகச் செயல்படும். பாலின் தரம் மற்றும் தூய்மையைப் பராமரிப்பதன் மூலம் ஆவின் பொருட்களின் ஆயுட்காலத்தை (Shelf life) அதிகரிக்க முடியும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திறப்பு விழாவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர மன்றத் தலைவர் லட்சுமி நாட்டான் மாது ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். மேலும், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, தருமபுரி ஆவின் பொது மேலாளர் மாலதி, கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் (பால்வளம்) மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள், சங்கப் பணியாளர்கள் திரளாகப் பங்கேற்றனர். நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய இந்த ஆய்வகம் பயன்பாட்டிற்கு வந்திருப்பதன் மூலம், தருமபுரி மற்றும் சென்னை மாநகர நுகர்வோருக்கு எவ்விதக் குறைபாடுமற்ற, தரமான பால் கிடைப்பது இனி நூறு சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
