கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூளகிரி பகுதியில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, புதிய பேருந்து பயணியர் நிழற்கூடம் அமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளன. சூளகிரி ஊராட்சிக்கு உட்பட்ட முக்கிய சந்திப்பான சூளகிரி ரவுண்டானா அருகே, 2025-26-ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.9.80 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தப் புதிய நிழற்கூடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமிபூஜை நேற்று கோலாகலமாக நடைபெற்றது.
அதிமுக கழக துணைப் பொதுச் செயலாளரும், வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பூமிபூஜை செய்து பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். சூளகிரி தெற்கு ஒன்றியச் செயலாளர் ஜி.பாலசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஓசூர் மாநகராட்சி உறுப்பினரும் மண்டலக் குழுத் தலைவருமான ஜெயபிரகாஷ், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பொருளாளர் மல்லையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சூளகிரி கிழக்கு ஒன்றியச் செயலாளர் எல்.செல்வம், வடக்கு ஒன்றியச் செயலாளர் வி.வெங்கடாசலம், மேற்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.வி.எஸ்.மாதேஸ் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்நிகழ்வில் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். குறிப்பாக, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட பொருளாளர் திம்மராஜ், பேரவை மாவட்ட துணைச்செயலாளர் கேசவன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட துணைச்செயலாளர் கலைச்செல்வி ராமன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும், தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒன்றியச்செயலாளர் ஆருப்பள்ளி பாலா மற்றும் மேடுப்பள்ளி பகுதி பொதுமக்கள் எனப் பெரும் திரளானோர் திரண்டு வந்து தங்கள் பகுதிக்குக் கிடைத்துள்ள இந்த புதிய வசதியைக் கொண்டாடினர். ரவுண்டானா பகுதியில் பயணிகள் வெயில் மற்றும் மழையில் அவதிப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, இந்தப் பணிகள் மிக விரைவாக முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

















