திருப்பூர் மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழாவின் போது, பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை போதை ஆசாமி ஒருவர் பட்டாக்கத்தியால் வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலரின் சாதுர்யமான தற்காப்பு நடவடிக்கையாலும், சக போலீசாரின் துரித செயல்பாட்டாலும் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, வீரராகவ பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்து வந்தனர். பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும் திருப்பூர் தெற்கு காவல் நிலைய போலீசார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கூட்டத்திற்குள் புகுந்த போதை ஆசாமி ஒருவர், அங்கிருந்த போலீசாருடன் வீணாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளையில் குதித்தார்.
பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ராமகிருஷ்ணன் அந்த நபரை எச்சரித்து அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான பற்கள் உடைய பட்டாக்கத்தியை எடுத்து திடீரென காவலர் ராமகிருஷ்ணனை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்து வெட்ட முயன்றார். சற்றும் எதிர்பாராத இந்தத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, காவலர் ராமகிருஷ்ணன் மின்னல் வேகத்தில் தனது இடுப்பு பெல்ட்டை கழற்றி தற்காப்புக்காகப் பயன்படுத்தினார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மற்ற காவலர்கள், உடனடியாக அந்த ஆசாமியைச் சூழ்ந்து கொண்டு மடக்கிப் பிடித்தனர்.
கைது செய்யப்பட்ட அந்த நபரைச் சோதனையிட்டதில், அவரிடமிருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தும் பட்டாக்கத்தி மட்டுமின்றி, மிளகாய் தூள் பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், அவர் தஞ்சாவூரைச் சேர்ந்த இளங்கோ என்பது தெரியவந்தது. அவர் எதற்காகக் கத்தி மற்றும் மிளகாய் தூளுடன் கோவிலுக்கு வந்தார்? ஏதேனும் நாசவேலை அல்லது கொள்ளைத் திட்டத்துடன் வந்தாரா? அல்லது போதை தலைக்கேறியதால் இந்தச் செயலில் ஈடுபட்டாரா? என்ற கோணத்தில் தெற்கு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
புனிதமான கோவில் வளாகத்தில், மக்கள் கூட்டத்திற்கு மத்தியில் காவலர் ஒருவரே கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக இருந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நூலிழையில் உயிர்த்தப்பிய காவலர் ராமகிருஷ்ணனின் வீரத்தையும், துரிதமாகச் செயல்பட்ட காவல் துறையினரையும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
