சரவணம்பட்டியில் பிரதான குடிநீர் குழாய் உடைப்பு  34 வார்டுகளில் விநியோகம் பாதிப்பு

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்குக் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, கடந்த சில நாட்களாக 34 வார்டுகளில் குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோவை – சத்தி சாலையில் உள்ள சரவணம்பட்டி அம்மன் நகர் பகுதியில், கடந்த 24-ஆம் தேதி இரவு சுமார் 11:30 மணியளவில், அதிகப்படியான நீர் அழுத்தம் காரணமாக 1,000 மி.மீ. விட்டம் கொண்ட பிரதான சிமெண்ட் குழாய் திடீரென உடைந்தது. இதிலிருந்து வெளியேறிய பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் ஆறாக ஓடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், குடிநீர் விநியோகமும் உடனடியாக நிறுத்தப்பட்டது.

தகவலறிந்த மாநகராட்சி குடிநீர் பிரிவினர், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சீரமைப்புப் பணிகளைத் தொடங்கினர். உடைந்த சிமெண்ட் குழாயை முழுமையாக வெட்டி அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக 6 மீட்டர் நீளமுள்ள வலிமையான இரும்பு குழாயைப் பொருத்த முடிவு செய்யப்பட்டது. குழாயில் தேங்கியிருந்த தண்ணீரை முழுமையாக வெளியேற்றிய பின், பழைய குழாயை அறுத்தெடுக்கும் பணி நேற்று நிறைவடைந்தது. பொதுவாக இத்தகைய பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றாலும், கடந்த மாதம் இதே பகுதியில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் மாற்றப்பட்ட குழாய் அடுத்த நாளே மீண்டும் உடைந்த கசப்பான அனுபவத்தை அதிகாரிகள் கருத்தில் கொண்டுள்ளனர்.

எனவே, மீண்டும் ஒருமுறை உடைப்பு ஏற்படாமல் இருக்க, புதிய இரும்பு குழாயின் இருபுறமும் ‘கப்ளிங்’ பொருத்தி, வெல்டிங் செய்யும் பணிகளை மிகவும் நிதானமாகவும் துல்லியமாகவும் மேற்கொள்ளுமாறு ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக நேற்று மதியமே முடிவடைய வேண்டிய பணிகள், நள்ளிரவு வரை நீடித்தன. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் உள்ள 34 வார்டுகளில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரின்றி அவதிக்குள்ளாகினர்.

சீரமைப்புப் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், “சரவணம்பட்டி பகுதியில் இரும்பு குழாய் பொருத்தி வெல்டிங் செய்யும் பணிகள் நள்ளிரவு 12 மணியளவில் முழுமையாக நிறைவடைந்தது. தற்போது ஒவ்வொரு மோட்டாராக இயக்கப்பட்டு மேல்நிலைத் தொட்டிகளுக்குத் தண்ணீர் ஏற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) முதல் பாதிக்கப்பட்ட வார்டுகளில் உள்ள வீடுகளுக்கு வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்” எனத் தெரிவித்தார். பழைய சிமெண்ட் குழாய்கள் அதிக அழுத்தத்தைத் தாங்க முடியாமல் அடிக்கடி உடைந்து வருவதால், படிப்படியாகப் பிரதான பாதைகளில் இரும்பு குழாய்களை மாற்ற மாநகராட்சி திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version