உலகப் பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானல் மலைச்சாலையில், காலையில் அரசுப் பேருந்து ஒன்றைக் காட்டு யானை திடீரென வழிமறித்ததால், பேருந்தில் இருந்த பயணிகள் பெரும் அச்சமடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கீழ்மலை மற்றும் மேல்மலைப் பகுதிகளில் ஏராளமான மலைக்கிராமங்கள் அமைந்துள்ளன. இந்தக் கிராமங்களைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது. மேலும், மலைச்சாலைகளில் காட்டு யானைகள் கூட்டமாகவோ அல்லது தனியாகவோ வலம் வந்து வாகனங்களை மறிக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடக்கின்றன.
இந்நிலையில், கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பள்ளத்து கால்வாய் பிரதான மலைச்சாலையில் நேற்று காலை அரசுப் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, வனப்பகுதிக்குள் இருந்து திடீரென வெளியே வந்த ஒற்றைக் காட்டு யானை, சாலையின் நடுவே நின்று அரசுப் பேருந்தின் பயணத்தைத் தடுத்தது. யானையைப் பார்த்ததும் பேருந்தில் இருந்த பயணிகள் பீதியடைந்து அலறினர்.
சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுநர், உடனடியாகச் சடன் பிரேக் அடித்து நிறுத்தினார். பின்னர், பேருந்தை சிறிது தூரம் பின்நோக்கி (ரிவர்ஸில்) இயக்கினார். சாலையில் வழிமறித்து நின்ற யானை, அதே இடத்தில் இருந்தபடி சிறிது நேரம் போக்கு காட்டியது. அதன் பின்னர், தானாகவே காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது. யானை வனப்பகுதிக்குள் சென்ற பின்னரே, பேருந்தில் இருந்த பயணிகள் நிம்மதியடைந்து, தொடர்ந்து டிரைவர் பேருந்தை இயக்கினார்.
பிரதான மலைச்சாலைகளில் தொடர்ந்து உலா வரும் காட்டு யானைகள், காட்டுமாடுகள் போன்ற வனவிலங்குகளால் வாகன ஓட்டிகளும், பயணிகளும் அச்சமடைந்துள்ளனர். எனவே, இந்த வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்டவும், சாலைகளில் அவற்றின் நடமாட்டத்தைக் குறைக்கவும் வனத்துறையினர் உரிய, தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















