கோவை: மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாநகரம், வனவிலங்குகள் அடிக்கடி காணப்படும் பகுதிகளுக்கு அருகில் உள்ளது. மதுக்கரை, தொண்டாமுத்தூர், நரசிபுரம், மருதமலை, காரமடை, மேட்டுப்பாளையம் வரையிலும் நீண்டு செல்லும் இந்த மலைத் தொடரில், யானை, சிறுத்தை, கரடி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் இயல்பாகச் சுற்றித் திரியும்.
இந்த நிலையில், கடந்த நவம்பர் 12–ம் தேதி வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒரு சிறுத்தை, கோவை மாநகரத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இருகூர் ராவுத்தர் பிரிவு அருகிலுள்ள NEPC மில் எதிர்ப்புறத்தில் அமைந்துள்ள தனியார் கம்பெனிக்குள் நுழைந்தது. அங்கிருந்த சிசிடிவி கேமராவில் சிறுத்தை சுதந்திரமாக உலா வந்த காட்சிகள் தெளிவாகப் பதிவாகியுள்ளன.
இரவு ரோந்துப் பணியில் இருந்த காவலர், அருகில் சிறுத்தை பதுங்கியிருந்ததை அறியாமல் நடந்து சென்றபோது திடீரென அது பாய்ந்து ஓடியது. அந்த கணத்தில் காவலர் பதறி நின்றுவிட்ட காட்சியே தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இருகூர், மதுக்கரை வனச்சரகத்துக்கு அருகில் இருப்பதால், வனவிலங்குகள் உணவும் தண்ணீரும் தேடி இரவு நேரங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வருவது வழக்கமாக இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறை குழு சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டது. தற்போது அந்த பகுதியில் சிறுத்தை இருப்பதற்கான சுவடு எதுவும் இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாநகரின் நுழைவுப் பகுதியில் நடந்த இந்த நிகழ்வு, அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
















