தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்தில், சுரண்டை நகராட்சி காங்கிரஸ் பெண் கவுன்சிலர், அவரது கணவர் மற்றும் சகோதரி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார், லாரி ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுரண்டை சிவகுருநாதபுரத்தைச் சேர்ந்தவர் அருள் செல்வபிரபு (50). இவர் மெட்டல் பாலீஷ் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி உஷா (40). இவர் அப்பகுதியில் மருந்தகம் (மெடிக்கல் ஷாப்) நடத்தி வந்ததோடு, சுரண்டை நகராட்சியின் காங்கிரஸ் கட்சி வார்டு கவுன்சிலராகவும் மக்கள் பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இத்தம்பதியினருக்குச் சுரண்டை – சங்கரன்கோவில் சாலையில் உள்ள ரெட்டைகுளம் பகுதியில் விவசாயத் தோட்டம் உள்ளது. தற்போது அங்குப் பூஞ்செடிகள் பயிரிடப்பட்டுள்ளதால், தினமும் அதிகாலையில் தோட்டத்திற்குச் சென்று பூப்பறிப்பதை இவர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
நேற்று அதிகாலை 4:30 மணியளவில், அருள் செல்வபிரபு தனது மனைவி உஷா மற்றும் உஷாவின் தங்கை பிளஸ்சி (35) ஆகியோருடன் ஒரே இருசக்கர வாகனத்தில் தோட்டத்திற்குச் சென்றனர். அங்குப் பூக்களைப் பறித்துக்கொண்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ரெட்டைகுளம் விலக்கு அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. இவர்களது இருசக்கர வாகனத்திற்குப் பின்னால் வந்த காய்கறி ஏற்றிய லாரி, எதிர்பாராதவிதமாக வாகனத்தின் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி மூவரும் சாலையில் விழுந்த நிலையில், லாரியின் பின்சக்கரம் அவர்கள் மீது ஏறி இறங்கியது. இதில் தலை மற்றும் உடல் சிதைந்து அருள் செல்வபிரபு, உஷா, பிளஸ்சி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுரண்டை போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரியின் ஓட்டுநரான குலையநேரி பகுதியைச் சேர்ந்த குமார் (30) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். மக்கள் பிரதிநிதியான உஷா மற்றும் அவரது குடும்பத்தினர் விபத்தில் பலியான செய்தி காட்டுத்தீ போலப் பரவியதால், சுரண்டை பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். அதிகாலையில் போதிய வெளிச்சமின்மை மற்றும் அதிவேகமாக வந்த லாரியே இந்த விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.














