பொள்ளாச்சி தம்பதியின் நெகிழ்ச்சிப் பயணம் தேடி வரும் மலபார் அணிலுக்குத் தினமும் இளநீர் விருந்து

இயற்கை எழில் கொஞ்சும் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலைப் பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு விளையும் இளநீரின் சுவை மற்றும் மருத்துவக் குணத்திற்காகவே கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க இளநீர் விளையும் மண்ணில், மனிதர்களுக்கும் வாயில்லா ஜீவன்களுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை விளக்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பொள்ளாச்சி சாலையில் இளநீர் கடை நடத்தி வரும் அம்பிகா – ஜெகநாதன் தம்பதியினரின் மனிதநேயச் செயல் இப்போது அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

இந்தத் தம்பதியினர் நடத்தி வரும் இளநீர் கடைக்குத் தினமும் ஒரு விசேஷ விருந்தாளி வருகை தருகிறார். அது சாதாரண அணில் அல்ல, அடர் வனப்பகுதிகளில் மட்டுமே காணப்படக்கூடிய ‘மலபார் அணில்’ (Malabar Giant Squirrel). ஆனைமலை வனப்பகுதியிலிருந்து வெளியேறும் இந்த அணில், மரத்திற்கு மரம் தாவி வெகு தொலைவிலிருந்து இந்தத் தம்பதியின் கடைக்கு வருகிறது. அந்த அணில் வருவதைக் கண்டதுமே, அம்பிகா – ஜெகநாதன் தம்பதி அதன் பசியைத் தீர்க்கத் தரம் வாய்ந்த இளநீர் ஒன்றைத் தனியாக வெட்டி, அதிலுள்ள இளந்தேங்காயை (வழுக்கை) லாவகமாக எடுத்துத் தயார் நிலையில் வைக்கின்றனர்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், மரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் அந்த அணில், தம்பதியினர் தேங்காயை நீட்டியதும் விறுவிறுவெனக் கீழே இறங்கி வருகிறது. மரத்தில் வௌவால் போலத் தலைகீழாகத் தொங்கிக்கொண்டே, மனிதர்களைக் கண்டு அஞ்சாமல் அவர்கள் கையிலிருந்து தேங்காயைப் பெற்று ரசித்துச் சாப்பிடும் காட்சிகள் பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகின்றன. பல ஆண்டுகளாகத் தொடர்ந்து இந்தத் தம்பதியினர் அந்த அணிலுக்கு உணவளித்து வருவதால், அவர்களுக்கும் அந்த வாயில்லா ஜீவனுக்கும் இடையே ஒரு ஆழமான நட்பு உருவாகியுள்ளது.

இந்தக் கடைக்கு இளநீர் குடிக்க வரும் வாடிக்கையாளர்கள், இப்போது இளநீரை விட இந்த மலபார் அணிலைக் காண்பதற்கே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். “மனிதநேயம் இன்னும் சாகவில்லை என்பதற்கு இந்தத் தம்பதியினரே சாட்சி” என நெட்டிசன்கள் தங்களது பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். பொள்ளாச்சியின் அடையாளமாக விளங்கும் இளநீருடன், இந்தத் தம்பதியின் அன்பும் இப்போது தமிழகம் முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளது. வன உயிரினங்கள் உணவு தேடி ஊருக்குள் வரும்போது அவற்றை விரட்டியடிக்காமல், அவற்றுடன் இணக்கமாக வாழும் இந்தத் தம்பதியின் செயல் ஒரு சிறந்த முன்னுதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

Exit mobile version