நீல வானில் பசுமைப் பயணம்… விமானத்துறையில் கார்பன் புகையை குறைக்க இந்தியன் ஆயில் – ஆகாசா ஏர் கைகோர்ப்பு!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை எரிசக்தி நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் விமான நிறுவனமான ஆகாசா ஏர் நிறுவனத்துடன் இணைந்து, நிலையான விமான எரிபொருள் (SAF) விநியோகத்தை மேம்படுத்துவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஹைதராபாத்தில் நடைபெற்ற ‘விங்ஸ் இந்தியா 2026’ சர்வதேச விமானப் போக்குவரத்து நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், எதிர்காலத்தில் விமானப் பயணங்களில் நிலையான எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யவும், ஆகாசா ஏர் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை இலக்குகளை எட்டவும் இரு நிறுவனங்களும் ஒருங்கிணைந்து செயல்பட உள்ளன. உலகளவில் விமானப் போக்குவரத்தால் ஏற்படும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் இந்த ‘எஸ்ஏஎப்’ எரிபொருள் மிக முக்கியப் பங்காற்றுவதோடு, சர்வதேச விமானத் துறை இலக்கு வைத்துள்ள நிகர-பூஜ்ஜிய உமிழ்வு (Net-Zero Emission) நிலையை அடைவதற்கான பயணத்தில் இது ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்த கார்பன் வெளியேற்றும் எரிபொருட்களின் பயன்பாட்டை விரிவாக்குவதிலும், தங்களது வாடிக்கையாளர்கள் தடையின்றி எரிசக்தி மாற்றத்திற்கு மாறுவதற்கும் இந்தியன் ஆயில் நிறுவனம் தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, அந்த நிறுவனத்தின் விமான வணிகத் தலைவர் சைலேஷ் தர் தெரிவித்தார். மேலும், ‘எஸ்ஏஎப்’ எரிபொருள் உற்பத்தி, அதன் விநியோகச் சங்கிலி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் கட்டமைப்புகளைக் கையாள்வதில் இந்தியன் ஆயில் பெற்றுள்ள நீண்டகால அனுபவத்தைப் பயன்படுத்தி, இந்திய வான்வெளியில் இந்த மாற்றத்தை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், எரிபொருள் விநியோகத்திற்கான இடங்கள், காலக்கெடு மற்றும் தேவையான எரிபொருள் அளவு ஆகியவற்றை இரு நிறுவனங்களும் இணைந்து மதிப்பீடு செய்ய உள்ளன. குறிப்பாக, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நிலையான மூலப்பொருட்கள் மற்றும் நவீன உற்பத்தி முறைகளைப் பயன்படுத்தி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் விமானங்களை இயக்குவதற்கான அனைத்து தொழில்நுட்ப சாத்தியங்களையும் இந்தத் கூட்டணி உறுதி செய்யவுள்ளது.

Exit mobile version