விண்ணதிரும் இன்னிசையோடு தூத்துக்குடியில் கோலாகல கிறிஸ்துமஸ் ‘கேரல் பவனி’

தூத்துக்குடி மாநகரில் உலகப் புகழ்பெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு, கண்கவர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களின் ‘கேரல் பவனி’ நேற்று இரவு மிக விமரிசையாக நடைபெற்றது. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை அறிவிக்கும் விதமாகவும், அமைதி மற்றும் மகிழ்ச்சியைப் பகிரும் விதமாகவும் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த வாகன அணிவகுப்பு, இந்த ஆண்டும் தூத்துக்குடி மக்களின் கண்களுக்குப் பெரும் விருந்தாக அமைந்தது. நள்ளிரவு தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலிகளுக்கு முன்னதாக நடைபெற்ற இந்த ஊர்வலத்தில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான இளைஞர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் தங்களது கற்பனைத் திறனைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட வாகனங்களுடன் பங்கேற்றனர்.

இந்த ஆண்டு கேரல் பவனியில் வழக்கமான குடில் அலங்காரங்களைத் தாண்டி, நவீனத் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் வகையில் விண்வெளிக்குச் செல்லும் ராக்கெட், வானில் பறக்கும் ஹெலிகாப்டர், ராட்சத ரோபோக்கள் மற்றும் கப்பல் போன்ற வடிவங்களில் வாகனங்கள் மின்விளக்குகளால் ஜொலித்தன. இவை தவிரப் பச்சை மனிதன் வேடமிட்டவர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் தாத்தா (சாண்டா கிளாஸ்) வேடமணிந்தவர்கள் குழந்தைகளைக் கவர்ந்தனர். தெற்கு காட்டன் ரோட்டில் இருந்து தொடங்கிய இந்தப் பவனி, வி.இ. ரோடு, குரூஸ்பர்னாந்து சிலை மற்றும் டபிள்யு.ஜி.சி. ரோடு வழியாகச் சென்று வரலாற்றுச் சிறப்புமிக்கப் பனிமய மாதா பேராலயத்தை அடைந்தது. ஊர்வலம் சென்ற வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு நின்று, பட்டாசுகள் வெடித்தும், இன்னிசை முழங்க நடனமாடியும் உற்சாகமாகப் பண்டிகையை வரவேற்றனர்.

பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை கருதி, இந்த ஆண்டு காவல்துறை சார்பில் சில முக்கியக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, மின்சாரக் கம்பிகளில் மோதி விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்க, அலங்கார ஊர்திகளின் உயரம் 10 அடிக்குள் இருக்க வேண்டும் என்றும், உயரத்தை மாற்றியமைக்கும் கிரேன் வாகனங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மேற்பார்வையில், ஏஎஸ்பி மதன் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். லயன்ஸ் டவுன், மட்டக்கடை, பாத்திமா நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்த வாகனங்கள் ஒன்றிணைந்த போது தூத்துக்குடி மாநகரமே வண்ண விளக்குகளின் ஒளியில் மூழ்கியது. இளைஞர்கள் இனிப்புகளை வழங்கியும், மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டும் இந்தப் பவனியை ஒரு மாபெரும் மக்கள் திருவிழாவாக மாற்றினர்.

Exit mobile version