துரித உணவகத்தை விடுத்து இயற்கை தேனீ வளர்ப்பு திண்டுக்கல் பட்டதாரி பெண்!

திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடியைச் சேர்ந்த 36 வயதான ஜூவைரிய்யா பாத்திமா மற்றும் அவரது கணவர் ஈசாக் ஆகியோர், லாபகரமான துரித உணவகத் தொழிலைக் கைவிட்டு, இயற்கை தேனீ வளர்ப்பின் மூலம் இன்று பலருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன் துரித உணவகம் நடத்தி வந்த இவர்கள், அத்தகைய உணவுகள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதை உணர்ந்து, மனமுவந்து அந்தத் தொழிலை விட்டு விலகினர். மனித ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் இயற்கை சார்ந்த தொழிலைச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் ‘டி.ஆர்., இயற்கை தேனீ பண்ணை’ என்ற பெயரில் தேனீ வளர்ப்புத் தொழிலைத் தொடங்கினர். இன்று தேனீக்கள் அவர்களது வாழ்வாதாரத்தை இனிப்பாக மாற்றியுள்ளதுடன், ஆண்டுக்கு லட்சக்கணக்கில் லாபத்தையும் அள்ளித் தருகின்றன.

தேனீக்களில் மலை தேனீ, கொம்பு தேனீ, இந்திய தேனீ, இத்தாலிய தேனீ மற்றும் கொசு தேனீ என ஐந்து வகைகள் உள்ளன. இதில் இருட்டில் வாழும் தன்மையுடைய இத்தாலிய தேனீக்கள், மற்ற வகைகளை விட அதிக அளவு தேனைச் சுமந்து வரும் திறன் கொண்டவை என்பதால், வணிக ரீதியாக வளர்ப்போருக்கு இத்தாலியத் தேனீக்களே அதிக லாபத்தை ஈட்டித் தருகின்றன. ஒரு தேனீ வளர்ப்புப் பெட்டியில் சராசரியாக 40,000 முதல் ஒரு லட்சம் தேனீக்கள் வரை வாழ்கின்றன. இதில் ஒரு ராணி தேனீயும், சில நூறு ஆண் தேனீக்களும் இருக்கும்; மீதமுள்ள அனைத்தும் வேலைக்கார தேனீக்களாகும். ராணி தேனீக்கள் 2 முதல் 3 ஆண்டுகள் வரை உயிர்வாழும் நிலையில், ஆண் மற்றும் வேலைக்கார தேனீக்களின் ஆயுட்காலம் வெறும் 60 நாட்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

பூக்களில் இருந்து தேனைச் சேகரிக்கும் கடினமான பணியை வேலைக்கார தேனீக்கள் மேற்கொள்கின்றன. குறிப்பாக சூரியகாந்தி, முருங்கை, வேம்பு, தென்னை, மா மற்றும் சப்போட்டா போன்ற பயிர்கள் வளரும் இடங்களில் தேனீ பெட்டிகளை வைப்பது அதிக தேன் உற்பத்திக்கு வழிவகுக்கும். தென்னந்தோப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் 15 முதல் 20 பெட்டிகள் வரை இடைவெளி விட்டு வைப்பதன் மூலம் தேனீக்கள் தடையின்றித் தேனைச் சேகரிக்க முடியும். நவீனத் தொழில்நுட்பமான ‘தேன் பிரித்தெடுக்கும் கருவி’யைப் பயன்படுத்துவதன் மூலம், தேன் அடைகளைச் சேதப்படுத்தாமல் தேனை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கலாம். பின்னர் அந்த அடைகளை மீண்டும் பெட்டிக்குள் வைத்துப் பயன்படுத்துவது நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்துகிறது.

வருமானத்தைப் பொறுத்தவரை, தேன் விற்பனை மட்டுமன்றித் தேன் மெழுகு விற்பனையிலும் பாத்திமா தம்பதியினர் பெரும் லாபம் காண்கின்றனர். ஆண்டுக்கு 300 முதல் 500 கிலோ வரை தேன் மெழுகு விற்பனை செய்வதன் மூலம் சுமார் 3.50 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. மேலும், ஆண்டுக்கு 6,000 கிலோ தேனை, ஒரு கிலோ 400 ரூபாய் வீதம் விற்பனை செய்து, 24 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுகின்றனர். ஆள் கூலி மற்றும் பராமரிப்புச் செலவுகள் போக, ஆண்டுக்கு 12 முதல் 14 லட்சம் ரூபாய் வரை நிகர லாபமாக இவர்களுக்குக் கிடைக்கிறது. ஆரோக்கியமற்ற உணவுகளை விற்றுப் பணம் சம்பாதிப்பதை விட, இயற்கையோடு இணைந்து தூய்மையான தேனை மக்களுக்கு வழங்குவதில் தங்களுக்கு மிகுந்த மனநிறைவு கிடைப்பதாக ஜூவைரிய்யா பாத்திமா பெருமிதத்துடன் தெரிவிக்கிறார்.

Exit mobile version