சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேர்மையின் அடையாளமாகத் திகழும் தூய்மைப் பணியாளர் ஒருவரின் செயல், காவல்துறை மற்றும் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குப்பைத்தொட்டியில் கிடந்த சுமார் 15 சவரன் தங்க நகைகளைத் தவறாமல் மீட்டு, உரியவர்களிடம் ஒப்படைத்த செல்வி என்ற பெண்ணின் நேர்மைக்கு இன்று மாவட்டமே தலைவணங்கிப் பாராட்டி வருகிறது.
காரைக்குடி காட்டுத் தலைவாசல் பகுதியைச் சேர்ந்த டார்ஜிலின் என்பவர் டிராவல்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த 15 சவரன் மதிப்பிலான தங்க நகைகளை, இவரது குழந்தை விளையாட்டுத் தனமாக எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுள்ளது. இது தெரியாமல் வீட்டின் கழிவுகளுடன் சேர்த்து நகைகளும் வெளியே வீசப்பட்டன. வழக்கம்போல் இப்பகுதியில் குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நகராட்சியின் தற்காலிகத் துப்புரவுப் பணியாளர் செல்வி, குப்பைகளைத் தரம் பிரிக்கும்போது அதில் தங்க நகைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பணத்தின் மீதான ஆசை சிறிதும் இன்றி, உடனடியாக அந்த நகைகளை மீட்டு காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்குப் பணியில் இருந்த அதிகாரிகளிடம் விவரத்தைக் கூறி நகைகளை ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து, காரைக்குடி ஏஎஸ்பி (ASP) ஆசிஷ் புனியா ஐபிஎஸ் முன்னிலையில், நகையின் உரிமையாளரான டார்ஜிலின் வரவழைக்கப்பட்டார். உரிய அடையாளங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு, ஏஎஸ்பி ஆசிஷ் புனியா அவர்கள் செல்வியின் முன்னிலையில் 15 சவரன் நகைகளையும் உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.
நகைகளைத் திரும்பப் பெற்ற டார்ஜிலின், தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டதோடு, செல்வியின் உயரிய குணத்தைப் பாராட்டி அவருக்குத் தனது சார்பில் 20,000 ரூபாய் ரொக்கப் பரிசை வழங்கினார். ஏஎஸ்பி ஆசிஷ் புனியா பேசுகையில், “வறுமையிலும் நேர்மையை விட்டுக்கொடுக்காத செல்வி போன்ற மனிதர்கள் சமூகத்தின் சொத்து” எனப் புகழாரம் சூட்டினார். வறுமை வாட்டினாலும் பிறர் சொத்துக்கு ஆசைப்படாத தூய்மைப் பணியாளரின் இந்தச் செயல், சமூக வலைதளங்களில் வைரலாகிப் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.















