பழநி பெரியம்மாபட்டி காப்புக்காட்டில் பெண் யானை உயிரிழப்பு  இயற்கை மரணம் என வனத்துறை விளக்கம்

திண்டுக்கல் மாவட்டம் பழநி வனச்சரகத்திற்கு உட்பட்ட பெரியம்மாபட்டி காப்புக்காடு பகுதியில், சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழநி வனப்பகுதியானது யானைகள், காட்டு மாடுகள், மான்கள், காட்டுப்பன்றிகள் மற்றும் செந்நாய்கள் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகளின் புகலிடமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், அடர்ந்த வனப்பகுதியில் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடப்பதாகவும், அதன் தந்தம் மற்றும் கோரைப்பற்கள் அமைந்துள்ள பகுதி சேதமடைந்து இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் பரவி, பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. சமூக ஆர்வலர்கள் பலரும் இது வேட்டையாக இருக்குமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்திய நிலையில், வனத்துறை இது குறித்து விரிவான விசாரணை மற்றும் உடற்கூறாய்வு மேற்கொண்டது.

இது தொடர்பாக வன அலுவலர் கோகுல கண்ணன் அளித்துள்ள விளக்கத்தில், கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி பெரியம்மாபட்டி வனப்பகுதியில் யானை இறந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், டிசம்பர் 21-ஆம் தேதி மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் மீனா தலைமையில் உயர்மட்டக் குழுவினர் நேரில் சென்று ஆய்வு நடத்தினர். உதவி வனப் பாதுகாவலர்கள் கருப்பையா, மனசீர் கலிமா மற்றும் வனவிலங்கு மருத்துவர் முத்து ராமலிங்கம் முன்னிலையில் யானையின் உடல் பரிசோதிக்கப்பட்டது. அப்போது, உயிரிழந்தது 20 வயதுள்ள பெண் யானை என்பதும், அதன் மரணம் முற்றிலும் இயற்கை காரணங்களால் நிகழ்ந்தது என்பதும் உறுதி செய்யப்பட்டது. சமூக வலைதளங்களில் பரவியது போல இது தந்தத்திற்காக நிகழ்த்தப்பட்ட வேட்டை அல்ல என்றும், இறந்த யானையின் முக்கிய பாகங்கள் மேல் பரிசோதனைக்காகச் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பரிசோதனை முடிவுகளுக்குப் பின், யானையின் உடல் அதே வனப்பகுதியில் முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யத் தொடர்ந்து ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version