இந்தியாவின் வருங்காலப் போக்குவரத்து மற்றும் வாகனத் தொழில் நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில், சிஎஸ்ஆர்எம் (CSRM) சொசைட்டி நடத்திய தேசிய அளவிலான பொறியியல் போட்டியின் எட்டாவது பதிப்பு, கோவையில் உள்ள ஹிந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கி மார்ச் 2-ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான இளம் பொறியியல் மாணவர்கள் மற்றும் புதுமையாளர்கள் தங்களது அதிநவீன வாகனங்களுடன் பங்கேற்றனர்.
இந்த மெகா போட்டியில் ‘சோலார் எலக்ட்ரிக் வாகன சாம்பியன்ஷிப்’ மற்றும் ‘என்ஜின் – எலக்ட்ரிக் கார்ட் வாகன சாம்பியன்ஷிப் 2026’ என இரண்டு முக்கியப் பிரிவுகள் இடம்பெற்றன. நாடு முழுவதிலும் இருந்து 48 அணிகள் பதிவு செய்த நிலையில், கடுமையான ஆன்லைன் தகுதித் தேர்வுகளுக்குப் பிறகு 34 அணிகள் மட்டுமே இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டன. தேர்வு செய்யப்பட்ட அணிகளுக்குப் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தொழில்நுட்பப் பணிமனைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. கடந்த நான்கு முதல் ஐந்து மாதங்களாக மாணவர்கள் இரவு பகலாக உழைத்து, தங்கள் வாகனங்களை வடிவமைத்து, தயாரித்து, சோதனைகளை முடித்து இக்களத்தில் இறங்கியிருந்தனர். இது வெறும் பந்தயம் மட்டுமல்லாது, வடிவமைப்பு அறிக்கை, செலவுத் திட்டம் மற்றும் வணிகத் திட்டம் என மாணவர்களின் மேலாண்மைத் திறனையும் சோதிக்கும் தொழில்முறை அனுபவமாக அமைந்தது.
கல்லூரி முதல்வர் ஜே.ஜெயா மற்றும் மெக்கானிக்கல் பொறியியல் துறைத் தலைவர் கே.சிவா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில், யுப்வி சோலார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அசோக் உதயகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சாம்பியன்ஷிப்பைத் தொடங்கி வைத்தார். வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தரத்தை உறுதி செய்ய “வீகிள் அசெப்டன்ஸ் புரோட்டோக்கால்” பரிசோதனைக்குப் பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. பிரேக் சோதனை, வேக உயர்வு, சஸ்பென்ஷன் மற்றும் சோலார் எண்ட்யூரன்ஸ் சவால் போன்ற கடினமான சோதனைகளைத் தாண்டி, இந்த ஆண்டின் சிறப்பு அம்சமான “ஆட்டோனமஸ் ரவுண்ட்” (Autonomous Round) நடைபெற்றது. இதில் ஓட்டுநர் இல்லாமல் சென்சார்கள் மற்றும் அல்காரிதங்கள் மூலம் வாகனங்கள் தானாக இயங்கியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.
இறுதிக் கட்ட எண்ட்யூரன்ஸ் பந்தயம் செட்டிபாளையத்தில் உள்ள புகழ்பெற்ற ‘காரி ஸ்பீட்வே’ (Kari Speedway) மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. போட்டியை நடத்திய ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனம் தனது மூன்று அணிகளைப் பல்வேறு பிரிவுகளில் களமிறக்கி கடும் போட்டியை அளித்தது. விறுவிறுப்பான இறுதிக்கட்டப் போட்டியில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ‘டீம் ஹைப்பீரியன்’ (Team Hyperion) ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. ஹிந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் ‘டீம் ஹிந்துஸ்தானி லஹூரியன்ஸ்’ இரண்டாம் இடத்தைப் பிடித்துப் பெருமை சேர்த்தது. நவீனத் தொழில்நுட்பம் மற்றும் நிலைத்தன்மை வாய்ந்த போக்குவரத்துத் தீர்வுகளை வலியுறுத்திய இந்தப் போட்டி, இந்தியப் பொறியியல் கல்வியில் ஒரு புதிய மைல்கல்லாக நிறைவுற்றது.















