தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரம், இன்று உலகளாவிய தொழில் மற்றும் கல்வி மையமாகத் திகழ்வதற்கு மிக முக்கியக் காரணமாக விளங்கும் ‘பிஎஸ்ஜி மற்றும் சன்ஸ்’ (PSG & Sons) அறக்கட்டளை, தனது வரலாற்றுச் சிறப்புமிக்க 100-வது நிறுவன தின விழாவைக் கொண்டாடியது. நீலாம்பூர் பிஎஸ்ஜி ஐடெக் (PSG iTech) வளாகத்தில் உள்ள பிரம்மாண்டமான கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இந்த நூற்றாண்டு விழா, ஒரு கல்வி நிறுவனத்தின் வெற்றியைக் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல், ஒரு சமூகத்தின் ஒரு நூற்றாண்டு கால வளர்ச்சியையும் பறைசாற்றும் விதமாக அமைந்தது. விழாவிற்குத் தலைமை தாங்கிய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன், பிஎஸ்ஜி-யின் நெடிய பயணத்தையும் அதன் சமூகப் பங்களிப்பையும் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்தார்.
1926-ஆம் ஆண்டு பி.எஸ். கோவிந்தசாமி நாயுடு அவர்களின் நான்கு புதல்வர்களான பிஎஸ்ஜி வெங்கடசாமி நாயுடு, பிஎஸ்ஜி ரங்கசாமி நாயுடு, பிஎஸ்ஜி கங்கா நாயுடு மற்றும் பிஎஸ்ஜி நாராயணசாமி நாயுடு ஆகியோரால் “தர்மமே தலைநிற்கும்” என்ற உயரிய நோக்கில் இந்த அறக்கட்டளை விதைக்கப்பட்டது. இன்று அது ஒரு மாபெரும் ஆலமரமாக வளர்ந்து, 30-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் அதிநவீன மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் மூலம் 36,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கல்வி அறிவையும், லட்சக்கணக்கான மக்களுக்குத் தரமான மருத்துவச் சேவையையும் வழங்கி வருகிறது. குறிப்பாக, முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்குவதிலும், வேடப்பட்டி போன்ற கிராமப்புறங்களில் விவசாய சமூகத்திற்காக ஆரம்பக்கால சுகாதாரப் பணிகளை முன்னெடுத்ததிலும் பிஎஸ்ஜி ஆற்றிய பங்கு ஈடு இணையற்றது என்று கோபாலகிருஷ்ணன் தனது தலைமையுரையில் பட்டியலிட்டார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் பத்மநாபன், தானும் ஒரு பிஎஸ்ஜி மாணவன் என்பதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். “சர்வஜனா பள்ளியில் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இந்த அறக்கட்டளை, இன்று சர்வதேசத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாக விரிவடைந்துள்ளது. ‘சர்வஜனா’ என்றால் ‘அனைவருக்குமான பள்ளி’ என்று பொருள். அந்தப் பெயருக்கு ஏற்ப ஜாதி, மத பேதமின்றி சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அனைவருக்கும் தரமான கல்வியை பிஎஸ்ஜி வழங்கி வருகிறது. இங்கு நான் கற்ற ஒழுக்கமும் அனுபவமுமே என் வாழ்வின் உயர்வுக்கு அஸ்திவாரமாக அமைந்தன,” என்று அவர் பாராட்டினார். நூற்றாண்டு விழாவின் முத்தாய்ப்பாக, 2026-27 கல்வியாண்டில் மாணவர்களின் உலகளாவியத் திறனை மேம்படுத்த ‘பிஎஸ்ஜி லீப் அகாடமி’ (PSG LEAP Academy) மற்றும் ‘பிஎஸ்ஜி வேர்ல்டு ஸ்கூல்’ (PSG World School) ஆகிய இரு புதிய கல்வி முன்னெடுப்புகள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பை நிர்வாக அறங்காவலர் வெளியிட்டார்.
விழாவின் சிகர நிகழ்வாக, சமூகத்தின் பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த ஆளுமைகளுக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டன. மனித நேயத்துடன் மருத்துவச் சேவை ஆற்றி வரும் சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ஆர்.வி.ரமணி மற்றும் தமிழக முன்னாள் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு ‘பிஎஸ்ஜி விஸ்வ சேவா ரத்னா’ விருதும், புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் நவகந்த பட் மற்றும் கர்நாடக இசைப் பேரரசி சுதா ரகுநாதன் ஆகியோருக்கு ‘பிஎஸ்ஜி விஸ்வ ஞான ரத்னா’ விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. பிஎஸ்ஜி அறக்கட்டளையின் கடந்த நூறு ஆண்டு காலப் பயணம் என்பது கோயம்புத்தூரின் எழுச்சி மட்டுமல்ல, அது தமிழகத்தின் அறிவுசார் வளர்ச்சியின் அடையாளம் என்பதைப் பறைசாற்றும் விதமாக இந்த நூற்றாண்டு விழா இனிதே நிறைவுற்றது.

















