இந்தியாவின் பொறியியல் துறையில் ஒரு மாபெரும் அடையாளமாகத் திகழும் கிர்லோஸ்கர் பிரதர்ஸ் லிமிடெட் (Kirloskar Brothers Limited – KBL), கோயம்புத்தூர் மாவட்டம் கனியூரில் உள்ள தனது பிரம்மாண்ட உற்பத்தி வளாகத்தில் புதிய நவீன தொழிற்சாலைக் கட்டிடத்தைத் திறந்து வைத்துள்ளது. 1926-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் ‘சென்ட்ரிபியூகல் பம்ப்’ (Centrifugal Pump) என்ற சாதனையைப் படைத்து, சரியாக நூறு ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்தத் தருணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விரிவாக்கம், இந்தியத் தொழில் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய சந்தையில் இந்தியாவின் உற்பத்தித் திறனைப் பறைசாற்றும் வகையில் இந்த ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய தொழிற்சாலைக் கட்டிடத்தைத் திறந்து வைத்துப் பேசிய கிர்லோஸ்கர் பிரதர்ஸ் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ரமா கிர்லோஸ்கர், “கனியூரில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய உற்பத்தித் தளம், இந்தியாவின் எதிர்காலத் தொழில் தேவைகளைச் சந்திப்பதற்கான எமது தயார்நிலையை உறுதிப்படுத்துகிறது. கடந்த 138 ஆண்டுகளாக நீர் மேலாண்மை, விவசாயம் மற்றும் மின்சாரத் துறைகளில் இந்தியாவோடு இணைந்து பயணிக்கும் கிர்லோஸ்கர் நிறுவனம், இந்த விரிவாக்கத்தின் மூலம் புதுமையான மற்றும் உயர்தரத் தீர்வுகளை வழங்கத் தனது திறனை மேலும் வலுப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த மதிப்பை வழங்குவதோடு, தேசக் கட்டமைப்பில் எமது பங்களிப்பு தொடர்ந்து நீடிக்கும்” எனத் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முன்மாதிரியாகத் திகழும் வகையில் இந்த புதிய ஆலை வடிவமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும். இந்த ஆலையின் ஒட்டுமொத்த மின்சாரத் தேவையில் சுமார் 80 சதவீதம் சூரியசக்தி (Solar Energy) மூலம் பெறப்படுகிறது. இதன் மூலம் கார்பன் வெளியேற்றத்தைக் கணிசமாகக் குறைப்பதுடன், நிறுவனத்திற்கு ஆண்டுக்கு சுமார் 21.64 லட்சம் ரூபாய் மின்சாரச் செலவு மிச்சமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘பசுமை உற்பத்தி’ என்ற இலக்கை நோக்கித் தொழில்துறை நகரமான கோவையில் இத்தகைய முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது மற்ற நிறுவனங்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்துள்ளது.
சர்வதேச அளவில் ஜாம்பவான் நிறுவனங்களுடன் போட்டியிட்டு, பெட்ரோலியத் துறைக்காக சுமார் 14,000 பம்ப்களை விநியோகிக்கும் மெகா ஒப்பந்தத்தை சமீபத்தில் கேபிஎல் (KBL) கைப்பற்றியுள்ளது. ‘ஏடெக்ஸ்’ (ATEX) போன்ற உயரிய சர்வதேசச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளதன் மூலம், இதுவரை வெளிநாட்டு நிறுவனங்களின் ஏகபோக ஆதிக்கத்தில் இருந்த பெட்ரோலியம் மற்றும் ரசாயனத் துறைகளில் இந்திய நிறுவனம் தனது முத்திரையைப் பதித்துள்ளது. நீர் மேலாண்மை முதல் அதிநவீன தொழில் துறை வரை பல்துறைப் பங்களிப்பை வழங்கி வரும் கிர்லோஸ்கர் நிறுவனம், கோவையில் மேற்கொண்டுள்ள இந்த விரிவாக்கம் ஆயிரக்கணக்கானோருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கும் பெரும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















