மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா, தனியாமங்கலம் கிராமத்தின் பாரம்பரியம் மற்றும் வீரத்தின் அடையாளமாகத் திகழும் 37-ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம், இன்று தனியாமங்கலம் – வெள்ளலூர் நெடுஞ்சாலையில் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து புகழ்பெற்ற காளைகள் மற்றும் அனுபவம் வாய்ந்த சாரதிகள் பங்கேற்ற இந்தப் பந்தயம், காண்போரை வியக்க வைக்கும் வகையில் புழுதி பறக்க விறுவிறுப்பாக அமைந்தது. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான மாட்டு வண்டிப் பந்தயத்தைக் காண, அதிகாலை முதலே சாலைகளின் இருபுறமும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று வீரர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற பெரிய மாட்டு வண்டிப் போட்டியில் மொத்தம் 12 வண்டிகள் களமிறங்கின. நிர்ணயிக்கப்பட்ட தூரத்தை மிகக் குறுகிய காலத்தில் கடக்க காளைகள் சீறிப்பாய்ந்த நிலையில், புலிமலைப்பட்டி முனிச்சாமி என்பவரது வண்டி முதலிடத்தைப் பிடித்து ரூ. 33,333 ரொக்கப் பரிசினைத் தட்டிச் சென்றது. அதனைத் தொடர்ந்து விராமதி அடைக்கலம் என்பவரது வண்டி இரண்டாம் இடத்தைப் பிடித்து ரூ. 22,222-ம், கோட்ட நத்தம்பட்டி ரவி என்பவரது வண்டி மூன்றாம் இடத்தைப் பிடித்து ரூ. 15,555-ம் பரிசாகப் பெற்றன. நான்காம் இடத்தைப் பிடித்த காரைக்குடி சிவா மற்றும் ஐந்தாம் இடத்தைப் பிடித்த அ. வல்லாளபட்டி காமாட்சி ஆகியோரது வண்டிகளுக்கு முறையே ரூ. 11,111 மற்றும் இதரப் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாட்டு வண்டிப் போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 48 ஜோடி காளைகள் பங்கேற்றன. போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், இந்தப் போட்டி இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. முதல் பிரிவில் புதுச்சுக்காம்பட்டி பி.எஸ். அதிபன் முதலிடத்தையும், மாம்பட்டி செல்வேந்திரன் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். தனியாமங்கலம் சுந்தராசு, சாத்தமங்கலம் அருண் மற்றும் கண்டிப்பட்டி தர்ஷினி நாச்சியார் ஆகியோரது காளைகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்து வெற்றி பெற்றன. அதேபோல், இரண்டாவது சுற்றில் தேவாரத்தைச் சேர்ந்த விஜய் ரேடியோஸ் காளைகள் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்தன. கரூர் ரஞ்சித் இரண்டாம் இடத்தையும், ராமநாதபுரம் பதனக்குடி சிவசாமி மூன்றாம் இடத்தையும் பெற்றனர். நரசிங்கம்பட்டி ராக்காயி ஆனந்த் மற்றும் தனியாமங்கலம் சுபாகரன் ஆகியோரது வண்டிகள் முறையே நான்கு மற்றும் ஐந்தாம் இடங்களைப் பெற்று வெற்றி வாகை சூடின.
வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கும், திறமையாக வண்டிகளைச் செலுத்திய சாரதிகளுக்கும் விழா குழுவினர் சார்பில் கௌரவமான பரிசுத்தொகையும், வெற்றிக் கோப்பைகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டன. இந்த வீர விளையாட்டைக் காண்பதற்காக வெள்ளலூர், சருகுவலையபட்டி, மட்டங்கிபட்டி, கீழையூர், சாத்தமங்கலம், கோட்டநத்தம்பட்டி மற்றும் மேலூர் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் வருகை தந்திருந்தனர். சாலையின் இருபுறமும் மக்கள் வெள்ளம் அலைமோதியதுடன், காளைகள் சீறி வரும்போது விசில் அடித்தும் கைதட்டியும் தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். தனியாமங்கலம் கிராமப் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து பாதுகாப்பு மற்றும் இதர வசதிகளைச் சிறப்பான முறையில் செய்திருந்தனர். மண்ணின் மரபு மாறாமல் நடைபெற்ற இந்த 37-ம் ஆண்டு பந்தயம், இப்பகுதி மக்களின் ஒற்றுமைக்கும் வீரத்திற்கும் ஒரு சான்றாக அமைந்தது.
















