கோவை மாநகரில் அடுத்தடுத்து நடந்த மோதல் சம்பவங்களின் தொடர்ச்சியாக, ஓட்டல் பார்ட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவன உரிமையாளரை ஆயுதங்களால் தாக்கிய பாஜக நிர்வாகி உள்ளிட்ட 9 பேர் கொண்ட கும்பலைப் பீளமேடு போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சிங்காநல்லூரைச் சேர்ந்த சூர்யா என்பவர் நடத்தி வரும் ‘பிக் டாடி’ (Big Daddy) ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் சார்பில், கடந்த 20-ஆம் தேதி நீலாம்பூர் பகுதியில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் பிரம்மாண்டமான இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈரோடு வடக்கு மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளர் ரகு சூர்யா மற்றும் அவரது நண்பர்களான உதய தீபன், சூர்யகுமார், அபிஷேக் ஆகியோர் கட்டணம் செலுத்திப் பங்கேற்றனர். அப்போது நடனமாடும் இடத்தில் ஏற்பட்ட சிறு மோதல் முற்றி, பிக் டாடி நிறுவன ஊழியர்களுக்கும் ரகு சூர்யா தரப்பினருக்கும் இடையே கடும் கைகலப்பு உருவானது. இதில் ரகு சூர்யா தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த அவமானத்திற்குப் பழிவாங்கத் துடித்த ரகு சூர்யா, கடந்த 24-ஆம் தேதி பீளமேடு விஜய் விலானசா ஓட்டலில் பிக் டாடி நிறுவனம் மீண்டும் ஒரு விருந்து நிகழ்ச்சி நடத்துவதை இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிந்துகொண்டார். இதனையடுத்து, ரகு சூர்யா தனது நண்பர்கள் 9 பேருடன் திட்டமிட்டு நான்கு சொகுசு கார்களில் அரிவாள், கத்தி மற்றும் பாட்டில்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பீளமேடு பகுதிக்குச் சென்றார். ஓட்டலிலிருந்து வெளியே வந்த உரிமையாளர் சூர்யா மற்றும் ஊழியர் தேவராஜ் ஆகியோரை வழிமறித்த அந்தக் கும்பல், கண் இமைக்கும் நேரத்தில் அவர்களை ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த இருவரும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த வன்முறைச் சம்பவம் குறித்துப் பெறப்பட்ட புகாரின் பேரில், பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர். தீவிரப் புலனாய்விற்குப் பிறகு, தலைமறைவாக இருந்த ரகு சூர்யா (29), ரிச்சர்ட் (26), ஸ்ரீமன், தீபக் (27), சூர்யகுமார் (27), வேதநாயகம் (26), வினோத் குமார் (25), முகமது உமர் மற்றும் உதய தீபன் (28) ஆகிய 9 பேரையும் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். கைதானவர்களிடமிருந்து தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகள் மற்றும் நான்கு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநகரின் அமைதியைக் கெடுக்கும் வகையில் இதுபோன்ற வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸார் எச்சரித்துள்ளனர். அரசியல் கட்சிப் பொறுப்பில் உள்ளவரே கூலிப்படை பாணியில் தாக்குதல் நடத்திய இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
