ராமநாதபுரத்தில் 7 அடி உயர ‘மலேசியா இரட்டை கோபுரம்’ கேக் ஐஸ்வர்யா பேக்கரியின் அசத்தல் முயற்சி!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரி சார்பில் மலேசியாவின் அடையாளமான ‘பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம்’ (Petronas Twin Towers) கேக் வடிவில் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்திற்கும் மலேசியா நாட்டிற்கும் இடையே நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் திருமண மற்றும் வணிக ரீதியான ஆழமான வரலாற்றுத் தொடர்பு உள்ளது. இந்த உறவைச் சிறப்பிக்கும் வகையிலும், இரு நாடுகளுக்கு இடையேயான நட்பைப் பிரதிபலிக்கும் வகையிலும் இந்த ஆண்டு இரட்டை கோபுர வடிவிலான கேக் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள ஐஸ்வர்யா பேக்கரி கிளையில் இந்த பிரம்மாண்ட கேக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் 7 அடி உயரம் கொண்ட இந்தத் தத்ரூபமான இரட்டை கோபுரத்தை உருவாக்க: 50 கிலோ சர்க்கரை 200 முட்டைகள் மற்றும் இதர மூலப்பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பேக்கரியின் கைதேர்ந்த கலைஞர்கள் பல மணி நேரம் உழைத்து இந்த கலைப்படைப்பை உருவாக்கியுள்ளனர். இதனை அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் நேரில் வந்து பார்த்துச் செல்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஐஸ்வர்யா பேக்கரி சார்பில் தனித்துவமான கேக் சிலைகள் வைக்கப்படுவது வழக்கம். கடந்த காலங்களில் ரத்தன் டாடா, பாரதியார், இசைஞானி இளையராஜா, கால்பந்து ஜாம்பவான் மரடோனா மற்றும் உலகக்கோப்பை ஆகியவற்றின் உருவங்களை கேக் வடிவில் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

இந்த விசேஷ முயற்சிக்குக் கூடுதல் சிறப்பாக, ஐஸ்வர்யா பேக்கரியின் புதிய கிளை ஒன்று விரைவில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் திறக்கப்பட உள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் சுவையை உலகத்தரம் வாய்ந்த மலேசிய மண்ணில் அறிமுகப்படுத்தும் இந்த நேரத்தில், அங்குள்ள இரட்டை கோபுரத்தையே கேக்காகச் செய்துள்ளது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version