கோவையில் 40 அடி உயர ‘ஸ்நோ மேன்’ – புரோஜோன் மாலில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடக்கம்!

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு, கோவை புரோஜோன் மாலில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக 40 அடி உயர பிரம்மாண்ட ‘ஸ்நோ மேன்’ (Snowman) மற்றும் ‘ஸ்நோமேன் வில்லேஜ்’ பொதுமக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோஜோன் மால், ஒவ்வொரு ஆண்டும் பண்டிகைக் காலங்களில் சிறப்பான அலங்காரங்களைச் செய்வது வழக்கம். இந்த ஆண்டு, இதுவரை தமிழகத்தில் இல்லாத புதிய முயற்சியாக, 40 அடி உயரத்தில் மிகப் பெரிய பனி மனிதன் (Snowman) சிலையை உருவாக்கியுள்ளனர். இதனுடன் ஒரு குட்டி பனி கிராமத்தையே (Snowman Village) மால் வளாகத்திற்குள் தத்ரூபமாக வடிவமைத்துள்ளனர்.

இது குறித்து புரோஜோன் மால் மையத் தலைவர் அம்ரிக் பானேசர் கூறுகையில், “கோவை மக்களுக்கு ஒரு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தையும், உற்சாகத்தையும் வழங்கவே இந்தச் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளோம். இந்த ‘ஸ்நோமேன் வில்லேஜ்’ மற்றும் மேஜிக்கல் லைட்டிங் அலங்காரங்களை பொதுமக்கள் டிசம்பர் 16 முதல் ஜனவரி 1 வரை இலவசமாகப் பார்வையிடலாம்,” எனத் தெரிவித்தார். மால் முழுவதும் வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுத் திருவிழாக் கோலம் பூண்டுள்ளது. பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ரூ.4,999-க்கு மேல் ஷாப்பிங் செய்பவர்களுக்கு ரூ.250 மதிப்பிலான உணவு கூப்பன்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன.

 திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஏராளமான பொதுமக்கள், குழந்தைகளுடன் வந்து இந்த 40 அடி உயர ஸ்நோ மேன் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இந்த கிறிஸ்துமஸ் கார்னிவெல் கொண்டாட்டங்கள் கோவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பள்ளி விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களைக் கழிக்கப் புரோஜோன் மால் ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது.

Exit mobile version