தமிழ்நாட்டில் அரசு பள்ளிக் கட்டடங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பதைத் தொடர்ந்து தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
2024 ஜூலை மாதம், ரூ.64.33 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டடத்தின் மேற்கூரை, அதன் திறப்புக்கு ஓராண்டு கடந்துவிட்ட நிலையில், நேற்று இடிந்து விழுந்தது. விடுமுறை தினம் என்பதால் மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளியில் இல்லாத காரணத்தால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணாமலை கூறியதாவது :
“தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிக் கட்டடங்களின் மேற்கூரைகள் இடிந்து விழுவது நாள்தோறும் நடக்கும் சம்பவமாகி விட்டது. ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் அதிகம் பயிலும் அரசு பள்ளிகளில் கூட, தி.மு.க. அரசு இப்படியான அலட்சியத்தை காட்டுவது மிகுந்த கவலையை ஏற்படுத்துகிறது.”
“இது போன்ற இடிந்து விழும் சம்பவங்களில், கட்டடங்களை கட்டிய ஒப்பந்ததாரர்கள் யார் ? அவர்களிடம் எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை தி.மு.க. அரசு பொதுமக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்,” எனவும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் தி.மு.க. அரசு எந்தெந்த மாவட்டங்களில் புதிய பள்ளிக் கட்டடங்களை அமைத்தது என்ற கேள்விக்கு பதிலளிக்காமல், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி ‘நாடகம்’ ஆடியதாகவும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், விளம்பரங்களில் மட்டுமே பிசியாக இருப்பதாகவும், அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இத்துடன், அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் கட்டிய அனைத்து பள்ளிக் கட்டடங்களும் தரப்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.