இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனின் புனே அருகேயுள்ள லோனாவாலா பகுதியில் உள்ள பங்களாவில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. மர்ம நபர்கள் பங்களாவில் புகுந்து, ரூ.50,000 ரொக்கத்தையும், ரூ.7,000 மதிப்புள்ள டிவியையும் திருடிச் சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
புனே மாவட்டம், மாவல் தாலுகா, டிகோனா பெத்தில் அமைந்துள்ள இந்த பங்களா, அசாருதீனின் மனைவி சங்கீதா பிஜ்லானிக்கு சொந்தமானது. கடந்த மார்ச் 7 முதல் ஜூலை 18 வரை யாரும் இல்லாத நேரத்தில் இந்த திருட்டு நடந்திருக்கலாம் என போலீசாருக்கு அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருடர்கள் பங்களாவின் பின்புற சுவரில் அமைந்திருந்த கம்பி வேலியை அறுத்து உள்ளே நுழைந்தனர். பின்னர், அவர்கள் முதல் மாடியில் உள்ள கேலரியில் ஏறி, ஜன்னல் கிரில்லை வலுக்கட்டாயமாக திறந்து பங்களாவிற்குள் புகுந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து முகமது அசாருதீனின் தனிப்பட்ட உதவியாளர் முகமது முஜிப் கான் புகார் அளித்துள்ளார். தற்போது சம்பாஜிநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.