சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவரான பூபேஷ் பகேல் அவர்களின் மகன் சைதன்யா பகேல், ரூ.2,100 கோடி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் (ED) கைது செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக கடந்த காலங்களில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த விவகாரத்தில் பணம் பரிமாற்றம், ஆளுநர் ஒப்புதல் இல்லாத நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல சிக்கல்கள் குறித்து அமலாக்கத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சைதன்யா பகேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணைக்கு பிறகு அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பூபேஷ் பகேல், 2014ஆம் ஆண்டு சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்று, 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார். அவரின் தலைமையில் காங்கிரஸ் கட்சி, சத்தீஸ்கரில் பாஜக வெற்றிச் சாம்ராஜ்யத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. தற்போது, அவர் பஞ்சாப் மாநில காங்கிரஸின் மேலிட பொறுப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
சைதன்யா பகேல் கைது சத்தீஸ்கர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.