மதுவிலக்கு மற்றும் கஞ்சா தடுப்பு பிரிவில் பணியாற்றும் மயிலாடுதுறை டி.எஸ்.பி. சுந்தரேசன், “எனது உயிருக்கு ஆபத்து உள்ளது” என தெரிவித்துள்ளார். இன்று காலை அலுவலகத்திற்கு செல்லும் வழியில் நிருபர்களிடம் அவர் பரபரப்பான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.
“என் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. ஆனால், அதற்காக என்னை பணிநீக்கம் செய்யவில்லை; மாற்று பணிக்கு அனுப்பியுள்ளனர். நான் நேர்மையாக பணியாற்றுகிறேன் என்பதால்தான் சிலர் விரும்பவில்லை. இது போலீசாரின் நிலை. கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம்,” என்று அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஊதிய உயர்வுகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், “ஒவ்வொரு ஆண்டும் ஒரு ஊதிய உயர்வு உரிமையாக இருக்கிறது. ஆனால் எனது 9 ஊதிய உயர்வுகளை தடுத்துள்ளனர். இது என்னை துன்புறுத்தும் முயற்சி” என்றார்.
பல்வேறு குற்றச்சாட்டுகள் பற்றி, “என் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை என்னை விசாரிக்கவில்லை. நான் 11 மாதமாக இரவு பகலாக நேர்மையாக வேலை செய்து வருகிறேன்” எனத் தெரிவித்தார்.
தந்தையின் உடல்நிலை குறித்து, “என் தந்தைக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டுள்ளது. சென்னையில் நான் குடும்பத்துடன் அவரை பார்க்க விரும்புகிறேன். இதற்காக மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் அனுப்பியுள்ளேன். ஆனால் இதுவரை பதில் வரவில்லை,” என்றார்.
முன்னாள் டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா மரணம், ஐ.பி.எஸ். விஜயகுமார் வழக்குகள் குறித்தும் கருத்து தெரிவித்த சுந்தரேசன், “நானும் விஷ்ணு பிரியா மரண வழக்கில் பணியாற்றியவர். அந்த அனுபவம் இன்னமும் என் மனதில் உள்ளது. விஜயகுமாருடன் நேரில் பணியாற்றவில்லை என்றாலும், அவர் என்னை ‘தங்கம்’ எனச் சொல்லியிருந்தார்” என உணர்ச்சிப்பூர்வமாக பேசினார்.
“நான் இறந்து விட்டால் மலர் வைத்து அழுவீர்கள். ஆனால் நான் உயிருடன் இருக்கும்போது யாரும் உதவுவதில்லை” எனக் கூறிய அவர், “எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையம் உடனடியாக விசாரிக்க வேண்டும்,” என்று வலியுறுத்தினார்.
பின்னர், அவர் அலுவலக பணிக்கு செல்ல தொடர்ந்து பயணித்தார்.