பண மூட்டை சிக்கலில் சிக்கிய டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா, தன்னை பதவி நீக்கும் நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் இல்லத்தில் ஏற்பட்ட தீவிபத்தை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு படையினருக்கு அவரது இல்லத்தில் ஒரு அறையில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் பாதியாக எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. இந்த தகவல் வெளியாகியதும், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, உச்ச நீதிமன்றம் மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணை குழுவை அமைத்து விசாரணை நடத்தியது. அந்தக் குழுவின் அறிக்கையில் பதவி நீக்கம் செய்வதற்கான பரிந்துரை இடம்பெற்றிருந்தது. இது பார்லிமென்ட் செயல்முறையாக கொண்டு செல்லப்படவுள்ளது.
ஒரு நீதிபதியை பதவி நீக்க, பார்லிமென்டில் இரு அவைகளிலும் விசேட தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். இதற்காக லோக்சபாவில் குறைந்தபட்சம் 100 எம்.பிக்கள், ராஜ்யசபாவில் 50 எம்.பிக்களின் ஆதரவு தேவைப்படும். இந்த தீர்மானத்தை மழைக்கால கூட்டத்தொடரில் – ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் கூட்டத்தொடரில் – தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா, விசாரணை குழுவின் பரிந்துரைகள் மற்றும் அறிக்கைகள் ஆதாரமற்றவை எனக் குற்றம்சாட்டி, அவற்றை ரத்து செய்யவும், பதவி நீக்க நடவடிக்கையை நிறுத்தவும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.