அமெரிக்காவில் குற்றச்செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களது விசா ரத்து செய்யப்படும் என்றும் இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கை, டார்கெட் நிறுவனத்தின் வாணிப மையத்தில் ஏற்பட்ட திருட்டுச் சம்பவத்தை அடுத்து வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே 1-ஆம் தேதி, அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இந்திய பெண், அந்த மாலில் சுமார் 7 மணி நேரம் பொருட்களை வாங்கும் வகையில் நடித்து, பின்னர் ரூ.1.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பணம் செலுத்தாமல் திருட முயன்றார்.
இச்சம்பவத்தை சந்தேகித்த மால் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் வழங்கினர். விரைந்து வந்த போலீசார், அந்தப் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் தொடர்பான கண்காணிப்பு வீடியோவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், “அமெரிக்காவில் திருட்டு, கொள்ளை, தாக்குதல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு விசா ரத்து செய்யப்படும். மேலும் எதிர்காலத்தில் அமெரிக்காவுக்குள் நுழைய தேவையான விசா பெறும் உரிமையையும் இழக்க நேரிடும். அமெரிக்காவின் சட்டம் மற்றும் ஒழுங்கை வெளிநாட்டவர்களும் மதித்து பின்பற்ற வேண்டும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.