புதுடில்லி : தலைநகர் டில்லியில் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
துவாரகா, வசந்த குஞ்ச், ஹாஸ்காஸ், பஷ்சிம் விஹார் மற்றும் லோதி எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஐந்து பிரபல தனியார் பள்ளிகளுக்கு, வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்றும் எச்சரிக்கை செய்யும் மின்னஞ்சல் வந்துள்ளது.
இதையடுத்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகங்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை உடனடியாக வெளியேற்றினர். தகவலறிந்த போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் உடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் விரைந்து சென்று தீவிர சோதனை நடத்தினர்.
ஆய்வின்போது எந்தவிதமான வெடிகுண்டும் கைப்பற்றப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என நிரூபிக்கப்பட்டது.
இதற்கு முந்தைய நாளும், டில்லியில் உள்ள இரண்டு பிரபல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருந்தது. அதுவும் பின்னர் தவறான எச்சரிக்கையாகவே முடிவடைந்தது.
கடந்த ஆண்டின் டிசம்பரிலும் ஒரே நாளில் 44 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இம்முறை மின்னஞ்சல் அனுப்பிய மர்ம நபரை அடையாளம் காண, அதன் IP முகவரியை வைத்து டெல்லி சைபர் கிரைம் பிரிவு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.