தமிழக வெற்றிக்கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநில மாநாடு வரும் ஆகஸ்ட் 25-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் அறிவித்துள்ளார்.
“வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்; வெற்றி நிச்சயம்” என்ற நம்பிக்கையுடன் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மதுரை பாரப்பத்தி பகுதியில் 237 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெற இருக்கிறது. இதில் வாகனங்களுக்கு மட்டும் 217 ஏக்கர் தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாட்டை முன்னிட்டு ஜூலை 16-ஆம் தேதி பந்தகால் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.
தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியாக திகழும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, ஆகஸ்ட் 25, திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
வாகை சூடும் வரலாறு திரும்பட்டும். வெற்றி நிச்சயம்.
என தெரிவித்துள்ளார்.
தென் மாவட்டங்களில் தமது கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு மதுரையில் நடைபெற உள்ளது. கடந்த நாட்களில் முதல்வர் ரோடுஷோ, மத்திய உள்துறை அமைச்சரின் ஆலோசனை கூட்டம், ஹிந்து முன்னணி முருக பக்தர்கள் மாநாடு என அனைத்து கட்சிகளும் மதுரையில் விழாக்களை நடத்தி வருகின்றனர். தற்போது விஜய் தலைமையிலான த.வெ.க. மாநாடு நடைபெறவிருப்பது, மதுரை நகரம் அரசியல் களத்தில் முக்கியக் கட்டமாக மாறிவருவதை காட்டுகிறது.
முன்னதாக கடந்த ஆண்டு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் த.வெ.க.வின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. அதிலும் ஏராளமானோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.