அகமதாபாத் : கடந்த ஜூன் 12ஆம் தேதி குஜராத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அகமதாபாத் மேகானி நகர் பகுதியில் உள்ள குடியிருப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 260 பேர் உயிரிழந்தனர். 242 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில், விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் அதிர்ச்சி நிலவியது.
இந்த சம்பவத்தைக் குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியும் கைப்பற்றப்பட்டு, அதிலிருந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, முதற்கட்ட விசாரணை அறிக்கை நேற்று நள்ளிரவில் வெளியிடப்பட்டுள்ளது.
என்ன காரணம் ?
15 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே அதன் இரண்டு என்ஜின்களும் செயலிழந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. முக்கியமாக, எரிபொருள் செல்லும் வால்வுகள் தானாகவே மூடப்பட்டதுதான் விபத்துக்கான முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், இரு விமானிகளின் உரையாடலும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. அதில், ஒரு விமானி மற்றொருவரிடம், “எரிபொருள் வால்வை ஏன் மூடினீர்?” என்று கேட்க, அதற்கு “நான் மூடவில்லை” என பதில் அளித்திருப்பது தெரியவந்துள்ளது.
அவசர நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை
என்ஜின்கள் செயலிழந்த நிலையில், அவசரக்கால இயக்க அமைப்பான RAT (Ram Air Turbine) மூலம் விமானத்தை இயக்க முயற்சிக்கப்பட்டது. சில நேரத்தில் வால்வுகள் மீண்டும் திறந்து, ஒரு என்ஜின் செயல்படத் தொடங்கியது. ஆனால் விமானம் உயரம் பெற முடியாமல் தரையில் மோதி தீப்பிடித்து முற்றிலும் உருக்குலைந்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முழுமையான அறிக்கை எப்போது ?
முதற்கட்ட அறிக்கை தற்போது வெளியாகியுள்ள நிலையில், முழுமையான விபர அறிக்கையை வெளியிட இன்னும் 6 மாதங்கள் ஆகும் என AAIB தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தில் தீவிர நாசவேலை காரணமா எனும் கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளீதர் மொஹோல் தெரிவித்துள்ளார்.
விமானப்பாதையின் அருகே பறவைகள் எதுவும் சென்ற சுட்டுறுதியும் பதிவு செய்யப்படவில்லை என்பதும், விமானம் கட்டடங்களுக்கு மேல் விழுந்ததால்தான் தீவிர சேதம் ஏற்பட்டதெனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.