மத்தியில் வைகோ மற்றும் மல்லை சத்யா இடையேயான கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வைகோ அண்மையில் கொடுத்த பேட்டியில், 1990களில் ஈழ விடுதலை இயக்கத்தில் ஏற்பட்ட பிரபாகரன்–மாத்தையா சிக்கலைக் காணமுடிகிறது. “பிரபாகரனிடம் விசுவாசமாக இருந்த மாத்தையா, பின்னாளில் அவரை கொலை செய்ய சதி திட்டத்தில் ஈடுபட்டார். அதேபோல், மல்லை சத்யாவும் போராட்டங்களில் பங்கேற்றவர் என்றாலும், துரோகம் செய்ததற்கான வாய்ப்பு மறுக்க முடியாத ஒன்று” என வைகோ கூறியுள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர் மாத்தையா. 1989-ஆம் ஆண்டு, அந்த இயக்கம் உருவாக்கிய மக்கள் முன்னணியின் தலைவராக செயல்பட்டார். பின்னர், இந்திய உளவுத்துறை RAW அமைப்புடன் கூட்டுச் சேர்ந்து இயக்கத் தலைவர் பிரபாகரனை விலக்க முயன்றதாக குற்றம் சுமத்தப்பட்டது.
பிரபல பத்திரிகையாளர் நீனா கோபால் எழுதிய “The Assassination of Rajiv Gandhi” என்ற நூலில், மாத்தையாவை RAW அமைப்பின் உளவாளி என விவரிக்கப்படுகிறது. 1989-ல் அவர் பிரபாகரனை கொலை செய்து தலைமை பதவிக்கு வரவேண்டும் என்ற தேசத்தின் உளவுத்துறை திட்டத்தில் இணைந்ததாகவும், 1993-ல் கிட்டுவின் கப்பல் இயக்கத்தின் தகவலை இந்திய அரசுக்கு வழங்கி அவரது மரணத்திற்குத் தூண்டிவைத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சூழலில் மாத்தையாவை ‘துரோகி’ என வர்ணித்தார் பிரபாகரன். அதேபோல், தற்போது வைகோவும், மல்லை சத்யாவை அத்தகைய ஒப்புமையுடன் விமர்சித்துள்ளார். “அந்தக் காலத்தில் போராடியவர்களும், இறுதியில் துரோகம் செய்தவர்களும் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவராக மல்லை சத்யாவும் இருக்க வாய்ப்பு உண்டு” என வைகோ கூறியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த மல்லை சத்யா, “வைகோ உயிரை மூன்று முறை காப்பாற்றியவன் நான். இன்று அவர், வாரிசு அரசியலுக்காக என்னை ‘துரோகி’ என அழைக்கிறார். இது மிகுந்த வேதனையை அளிக்கிறது” எனக் கூறியுள்ளார். மேலும், தன் மீது ‘துரோகி’ குற்றச்சாட்டை வைத்து வெளியேற்ற முயற்சி வைகோ மேற்கொள்கிறார் என்றும், துரை வைகோவுக்காக தான் இவ்வாறு செய்கிறார் என்றும் அவர் தெரிவித்தார்.