திருவாரூர் : திருவாரூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய வளர்ச்சித்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார்.
அதில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த அவர், “அ.தி.மு.க.வை மீட்க முடியாதவர், தமிழ்நாட்டை மீட்க்கப் போவதாக சொல்கிறார். பா.ஜ.க.விடம் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்தவர் இ.பி.எஸ். ஆட்சியில் இருந்தபோது தமிழ்நாட்டிற்கு துரோகம் செய்தவர். தன்னை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களுக்கே துரோகம் செய்தவர்,” என்றார்.
மேலும், “கீழடி என்றால் கீழே தள்ளுவது மட்டுமே தெரிந்தவர். பா.ஜ.க.வின் ஒரிஜினல் குரலாக இப்போது பேச ஆரம்பித்துள்ளார். பழனியாண்டவர் கல்லூரியில் புதிய கட்டிடத்தை மயக்கத்தில் போய் திறந்து வைத்தாரா என்பதையும் மக்கள் கேட்கிறார்கள்,” என்றும் அவர் தெரிவித்தார்.
“பா.ஜ.க.வினர் கூட, கொடுத்த காசுக்கு மேல் கூவுகிறார் இ.பி.எஸ். என விமர்சிக்கிறார்கள். கோவில் பணத்தில் கல்லூரி கட்டுவது அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் செல்லக்கூடியது. இதையும் அறியாமல் எப்படி முதல்வராக இருந்தார்?” என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இந்த நிகழ்வின் மூலம், எதிர்க்கட்சியை கடுமையாக எதிர்த்துப் பேசிய முதல்வர், தற்போதைய அரசின் வளர்ச்சி திட்டங்கள் மட்டுமின்றி, எதிர்க்கட்சியின் அரசியல் அணுகுமுறையையும் விமர்சித்தார்.